search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்பி வேலுமணி"

    • அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை முடக்குவதில் தான் தி.மு.க.வினர் குறியாக உள்ளனர்.
    • எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய சிறப்பான ஆட்சியின் பலன்களை மக்கள் உணர்ந்து அ.தி.மு.க.விற்கு வாக்களிப்பார்கள்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையம் ஊராட்சி கள்ளிமேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொது க்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி., வேலுமணி பேசியதாவது:-

    மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்துவதை விட்டு, விட்டு , அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை முடக்குவதில் தான் தி.மு.க.வினர் குறியாக உள்ளனர். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஜெயலலிதா செய்த நல்ல பல திட்டங்களும், எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய சிறப்பான ஆட்சியின் பலன்களை மக்கள் உணர்ந்து அ.தி.மு.க.விற்கு வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    • யாரெல்லாம் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.
    • நம்மை பற்றி தொண்டர்களுக்கு தெரியும். மக்களுக்கும் தெரியும்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-

    யாரெல்லாம் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.

    அ.தி.மு.க என்பது தாய் வீடு. அனைவரும் தாய் வீட்டிற்குதான் வருவார்கள். இங்கிருந்து யாரும் வெளியே போக மாட்டார்கள்.

    சாதாரண தொண்டர்களுக்கும் எம்.எல்.ஏ., அமைச்சர் என மிகப்பெரிய பொறுப்புகளை கொடுத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா.

    அந்த வகையில் ஒன்றிய செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராக உயர்ந்து, கட்சியின் பொது செயலாளராகவும் திறம்பட செயலாற்றி வருகிறார்.

    சமூக வலைதளங்களில் அ.தி.மு.க உறுப்பினர்கள் பலர், பா.ஜ.கவுக்கு செல்வதாக தி.மு.கவும், பா.ஜ.கவும் கூட்டு சேர்ந்து கொண்டு வதந்தியை பரப்பி வருகின்றனர். அதனையெல்லாம் நான் பார்ப்பதும் இல்லை. கண்டு கொள்வதும் இல்லை. அதனை பற்றி பேசினால் நமக்கு தான் நேரம் விரயமாகும்.

    வெறும் 3 முதல் 4 சதவீதம் வாக்காளர்கள் வைத்துள்ள பா.ஜ.கவில் நாம் சேரப் போகிறோம் என்று கூறினால் அதற்கு நாம் பதில் கூற வேண்டுமா? தமிழகத்தில் 35 முதல் 40 சதவீத வாக்காளர்கள் உள்ள கட்சி அ.தி.மு.க.

    தி.மு.க.வும், அ.தி.மு.கவும் ஒன்று சேருமா? பா.ஜ.கவும், காங்கிரசும் ஒன்று சேருமா? அது போல தான் நம்மை பற்றி பரப்பப்படும் வதந்தியும். அதனால் அதனை பெரிய விஷயமாக எடுத்து கொள்ளாமல் அப்படியே விட்டு விடுங்கள்.

    நம்மை பற்றி தொண்டர்களுக்கு தெரியும். மக்களுக்கும் தெரியும். பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ள நமக்கு காலரை தூக்கி விட்டு பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு கேட்கும் தகுதி உள்ளது. அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை. அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை தேடி தருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுணன்,கே.ஆர்.ஜெயராமன், சூலூர் கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • தமிழகத்தில் தற்போதைய தேவை ஆட்சி மாற்றம்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கும் திட்டங்கள் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தது தான்.

    கருமத்தம்பட்டி:

    கருமத்தம்பட்டியில் நடந்த கிறிஸ்தவ அமைப்பு மாநாட்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் தற்போதைய தேவை ஆட்சி மாற்றம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் பல்வேறு வாக்குறுதிகளை தந்தனர். சிறுபான்மை மக்களுக்கு என்றும் அம்மா வழியில் பாதுகாவலர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பல திருச்சபை திறப்புக்கு காரணம் அவர் தான்.

    முதலமைச்சராக இருந்தபோதும் எளிதாக மக்கள் அணுகக் கூடியவராக செயல்பட்டார். அவர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று தான் கோவை மாவட்டத்தில் 10 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டு காலம் இல்லாத வளர்ச்சியை எடப்பாடி பழனிசாமி தந்துள்ளார். மேம்பாலம், அத்திக்கடவு-அவினாசி திட்டம், கலெக்டர் அலுவலகம், புதிய கல்லூரிகள், தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனையில் புதிய கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கும் திட்டங்கள் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தது தான்.

    கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நடத்தப்படும் பல பள்ளிகளுக்கு அனுமதி வழங்கினார். தற்போதைய ஆட்சியில் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டும். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம். பாராளுமன்ற தேர்தலில் பழனிசாமி தலைமையில் பெரிய கூட்டணி அமையும். சட்டசபை தேர்தல் எப்போது நடந்தாலும் பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்பார்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும், சட்டசபை தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. வெற்றி பெறும். அவர் பொறுப்பேற்ற பின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தான் அ.தி.மு.கவின் தலைவர்.
    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலிமையான கூட்டணி அமையும்.

    கோவை:

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    2½ ஆண்டு காலமாக ஆட்சி செய்து வரும் தி.மு.க அரசு கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டமும் தரவில்லை. எந்தவொரு திட்டமும் புதிதாக வரவில்லை.

    கோவையில் சாலைகள் தரமற்ற முறையில் போடப்படுகிறது. பல சாலைகள் போடப்படவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கோவையில் 500 சாலை திட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்தார்கள். எனவே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தால் தான் தமிழ்நாட்டிற்கு விடிவு காலம் வரும்.

    நான் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே என சிலர் பிரச்சனையை கிளப்பி வருகின்றனர். இந்த பிரச்சனையை கிளப்புபவர்கள் யார் என்று தெரியவில்லை. அது எங்கிருந்து வருகிறது எனவும் தெரியவில்லை.

    தி.மு.க. ஐ.டி.விங் குழுவினர் ஏதாவது செய்து அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இது போன்ற கருத்துக்களை பரப்பி வருகின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தான் அ.தி.மு.கவின் தலைவர்.

    ஏக்நாத் ஷிண்டே என்பவர் அவரது கட்சிக்கு துரோகம் செய்துள்ளார். நான் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேன். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த அ.தி.மு.க தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி பின்னால் முழுமையாக நிற்கிறோம். நான் என்றைக்குமே அ.தி.மு.க காரன் தான். எனது குடும்பமே அ.தி.மு.க குடும்பம் தான். எனவே எந்தவித குழப்பம் செய்தாலும் இங்கு எதுவும் நடக்காது. நாங்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வீறுநடை போடுவோம்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலிமையான கூட்டணி அமையும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம். எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க வெல்லும். அத்தனை மக்களும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என நினைக்கின்றனர்.

    பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி விட்டார். அதனை இவர்களால்தாங்க முடியவில்லை. அதனால் இப்படி குழப்பம் ஏற்படுத்த பார்க்கிறார்கள். இதுபோல் சில்மிஷம் செய்து எங்களை பிரிக்க நினைக்கிறார்கள். அது நடக்காது. அ.தி.மு.க.வில் இருந்து என்னை மட்டுமல்ல. யாரையும் பிரிக்க முடியாது.

    எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும்.
    • கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஐ.பி.எல் போட்டிகளைப் பார்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் கொடுக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை ஒன்றை விடுத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஐ.பி.எல் போட்டிகளைப் பார்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு 400 பாஸ் கொடுக்கப்பட்டது என கூறினார்.

    இதனிடையே சபையில் பேசிய தருமபுரி பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், தமிழ்நாட்டில் திறமையான வீரர்கள் பலர் இருந்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை. ஆனால் தமிழ்நாட்டின் அணி போல விளம்பரம் செய்து வர்த்தக லாபம் அடைகிறது. தமிழ்நாட்டு வீரர்களே இல்லாத அந்த அணியை அரசு தடை செய்யவேண்டும் என மக்கள் விரும்புவதாக கூறினார்.

    • சபாநாயகர் அப்பாவு உடன் அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார்.
    • சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

    சென்னை:

    சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    அப்போது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணை தலைவராக பதவி வகித்து வந்த நிலையில் அவரது பதவியை பறிக்குமாறும், சட்டசபையில் அவரது இடத்தை மாற்றுமாறும் அ.தி.மு.க. சார்பில் சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    ஆனால் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் அடுத்தடுத்து வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கு நிலுவையில் இருந்ததால் ஓ.பி.எஸ்.சின் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி மற்றும் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    மேலும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கும் நிலுவையில் இருந்து வந்தது.

    இந்த நிலையில் 2 வழக்குகளையும் விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளும் செல்லும் என்று தீர்ப்பு கூறி ஓ.பன்னீர் செல்வத்தின் மனுக்களை தள்ளுபடி செய்தார்.

    ஐகோர்ட்டில் சாதகமான தீர்ப்பு கிடைத்ததை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின், சட்டசபை அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை பறிக்கவும், சட்டசபையில் அவரது இடத்தை மாற்றவும் அ.தி.மு.க. சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்காக சபாநாயகர் அப்பாவுவை, அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி இன்று சந்தித்து பேசினார்.

    அப்போது ஓ.பன்னீர் செல்வத்தை, எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கவேண்டும். சட்டசபையில் அவரது இருக்கையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

    • காவல் துறையை இந்த அரசு தவறாக பயன்படுத்துகிறது.
    • முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்தது.

    இதுபற்றி நிருபர்களிடம் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-

    எனது வீட்டில் ஏற்கனவே 2 முறை சோதனையிட்டு ஒன்றும் கிடைக்கவில்லை. 3-வது முறையாக நடைபெற்ற இந்த சோதனையில் ரூ.7100 மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது.

    இது தவிர எனது அம்மாவின் சிறு நகைகளை எடுத்து சென்றுள்ளனர். வேறு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதை அதிகாரிகளே எழுதி கொடுத்து விட்டு சென்று உள்ளனர்.

    காவல் துறையை இந்த அரசு தவறாக பயன்படுத்துகிறது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச் செயலாளராக வரவுள்ள நிலையில் எங்களை பழி வாங்குவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீசாரை ஏவி சோதனை நடத்துகிறார்.

    மின் கட்டண உயர்வை திசை திருப்பவும் அண்மையில் கோவை, திருப்பூர் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மக்களிடம் இருந்த வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாமலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே போல் அடையாறில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு பிறகு நிருபர்களிடம் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    லஞ்ச ஒழிப்பு துறையினர் என்னுடைய வீட்டில் இரண்டாவது முறையாக சோதனை நடத்தி உள்ளனர். இந்த சோதனையில் வீட்டில் இருந்து கைபேசிகள் இரண்டையே எடுத்து சென்றுள்ளனர்.

    முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை. என்னுடைய குடும்பத்தாரின் ஆதார் அட்டைகள், பள்ளி சான்றிதழ்கள் போன்றவற்றையே எடுத்து சென்று உள்ளனர். அவை முக்கியமான ஆவணங்களாக இருக்கலாம்.

    எடப்பாடி பழனிசாமியுடன் துணை நிற்போரின் வீடுகளில் சோதனை நடத்துகின்றனர். மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதியை மத்திய அரசே வழங்குகிறது. மருத்துவக் கல்லூரிக்கு தடையில்லா சான்றிதழ் மட்டுமே வழங்குகிறது.

    மருத்துவக் கல்லூரிக்கு தடையில்லா சான்றிதழ் கொடுத்ததற்காக என் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது என்றால், தி.மு.க. ஆட்சியில் கல்லூரி தொடங்க தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டதற்கு எல்லாம் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.

    இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.

    • எஸ்.பி.வேலுமணி மீது தெருவிளக்குகளை எல்.இ.டி.யாக மாற்றும் திட்டத்தில், மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • சி. விஜயபாஸ்கர் மீது மருத்துவ கல்லூரி அனுமதி முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோவை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    எஸ்.பி.வேலுமணி மீது தெருவிளக்குகளை எல்.இ.டி.யாக மாற்றும் திட்டத்தில், மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்ததாகவும், சி. விஜயபாஸ்கர் மீது மருத்துவ கல்லூரி அனுமதி முறைகேடு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று ஒரே நேரத்தில் 2 அமைச்சர்களின் வீடுகள், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 44 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையானது அனைத்து இடங்களிலும் மாலை வரை நீடித்தது. இந்த சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு தொடர்பாக நடந்த சோதனையில் ரூ.32.98 லட்சம் ரொக்கப் பணம், 1 கிலோ 228 கிராம் தங்க நகைகள், 948 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 10 கார்களும் கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 316 ஆவணங்கள் 2 வங்கி லாக்கர் சாவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதேபால் சி.விஜயபாஸ்கர் மீதான வழக்கு தொடர்பாக நடந்த சோதனையில் ரூ.18.37 லட்சம் ரொக்கப் பணம், 1 கிலோ 872 கிராம் தங்க நகைகள், 8 கிலோ 28 கிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

    வழக்கு தொடர்பாக 120 ஆவணங்கள், 4 வங்கி லாக்கர் சாவிகள், 1 பென் டிரைவ், 1 வன் தட்டு உள்ளிட்டவை விசாரணைக்காக கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளனர்.

    • சி.விஜயபாஸ்கர் வீடுகளிலும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
    • எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடந்த சோதனைக்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கோவை:

    எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அப்பாவு எம்.எல்.ஏ. அளித்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக எஸ்.பி.வேலுமணியின் வீடுகள், அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

    இதேபோல் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடுகளிலும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனைக்கு பிறகு எஸ்பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நெருங்கிய நண்பர்கள் என்று சிலர் வீட்டில் சோதனை மேற்கொண்டார்கள்; ஆனால் அவர்கள் யாரென்றே எனக்கு தெரியாது என்றார். மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மூலம் மின் கட்டண உயர்வை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என்றும் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.

    எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் சோதனை நடப்பது பற்றி தகவல் அறிந்த அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரது வீட்டுக்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடந்த சோதனைக்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 7 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவிந்தனர்.
    • அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    கோவை:

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வீடு உள்பட கோவையில் 9 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு சோதனை நடைபெறும் தகவல் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளிடையே பரவியது.

    தகவல் அறிந்ததும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவிந்தனர். தொடர்ந்து தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் வாசலில் அமர்ந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். சோதனை நடப்பதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே முன்னாள் அமைச்சரின் வீட்டில் சோதனை நடக்கும் தகவல் அறிந்து, எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. எட்டிமடை சண்முகம் ஆகியோர் அங்கு வந்தனர்.

    அவர்கள் எஸ்.பி.வேலுமணியின் வீட்டிற்குள் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர்.

    இதனால் அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எம்.எல்.ஏ.க்களை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.

    தொடர்ந்து தொண்டர்கள் வாசலில் நின்றபடி கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்டு இருந்த அ.தி.மு.க.வினரை போலீசார் கலைந்து செல்ல வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் 7 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100-க்கு மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

    • ஒரு சில சுயநல சக்திகளோடு இணைந்து, அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு இந்த விடியா தி.மு.க. அரசு உதவி செய்தது.
    • எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்துப் போராடி வெல்வோம்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்களின் துயர் துடைக்க, வருகிற 16-ந்தேதி அன்று தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. கழகத்தில் தீவிர களப்பணி ஆற்றி வரும் கழக செயல்வீரர்கள் இந்த அறப்போரில் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றுவதைத் தடுக்க, அவர்களது கவனத்தை திசை திருப்ப, இயக்க முன்னோடிகளான, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் மூன்றாவது முறையாக ரெய்டு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்த இந்த விடியா அரசின் முதல்-அமைச்சர் என்ற முறையில் மு.க. ஸ்டாலின் தனது கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவல் துறையாக ஏவி விட்டுள்ளார்.

    ஏற்கனவே, இருவரது வீடுகளிலும் இரண்டுமுறை சோதனை நடத்தி வெறுங்கையோடு திரும்பிய லஞ்ச ஒழிப்புத் துறையினர், மூன்றாவது முறையாக சோதனை செய்வது வேடிக்கையாக உள்ளது.

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது இந்த விடியா தி.மு.க. அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை குட்டு வாங்கி வருகிறது. வழக்கு தொடுத்த தனியார் அமைப்போ, வழக்கில் ஆஜராகி தங்களிடம் உள்ளதாகக் கூறும் (இல்லாத) ஆதாரங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல், வாய்தா மேல் வாய்தா வாங்கி வருகிறது. இதில் இருந்தே அவர்கள் பொய்ப் புகார் கொடுத்திருப்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு புரிந்துள்ளது.

    தி.மு.க. அரசு, நேர்மையான அரசு என்று தங்களைத் தாங்களே மார்தட்டிக்கொள்ளும் இந்த விடியா தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் ஸ்டாலின் திராணி இருந்தால் உச்சநீதிமன்றத்தால் இரண்டு நாட்களுக்கு முன்பு குட்டுபட்டுள்ள தி.மு.க. அமைச்சரை உடனடியாக அமைச்சரவையில் இருந்து விடுவித்து, வழக்கை விரைந்து நடத்தத் தயாரா? முறைகேடு புகார்கள் பதியப்பட்டுள்ள முன்னாள், இந்நாள் தி.மு.க. அமைச்சர் கள் 13 பேர் மீதுள்ள முறைகேடு புகார்கள் குறித்த வழக்கினை விரைந்து நடத்தி அவர்கள் மீது தண்டனை வாங்கித் தருவாரா?

    எதிர்க்கட்சியினர் மீது பொய் புகார் தொடுத்து, தனது ஏவல் துறை மூலம் பழிவாங்கும் போக்கை கைவிட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களுக்கு இனியாவது நல்லது செய்வது பற்றி சிந்திக்க வேண்டும்.

    ஒரு சில சுயநல சக்திகளோடு இணைந்து, அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு இந்த விடியா தி.மு.க. அரசு உதவி செய்தது. ஆனால், அச்சதிகளை சட்டப்படி நீதிமன்றங்கள் மூலம் சந்தித்து, சதிகளை தவிடு பொடியாக்கி, இன்று தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. வெற்றிநடை போட்டு வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத இந்த விடியா தி.மு.க. அரசு, மீண்டும் குறுக்கு வழியில் தனது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் சோதனையை மேற்கொண்டிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்துப் போராடி வெல்வோம். எங்கள் மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. தி.மு.க. மந்திரிகளைப் போல் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிக்கப் பார்க்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் இதுவரை முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படும்போது யாராவது ஒரு தலைவரின் வீடுகளில்தான் சோதனை நடத்தப்படும்.
    • இன்று ஒரே நாளில் 2 அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியின் போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி.

    கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வான இவர் ஊரக வளர்ச்சித்துறை பணிகளில் முறைகேடு செய்திருப்பதாக ஏற்கனவே 3 தடவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2019-2020-ம் ஆண்டுகளில் தமிழகத்தில் தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அப்பாவு எம்.எல்.ஏ. லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தார்.

    அந்த வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எஸ்.வி.வேலுமணி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எல்.இ.டி. விளக்குகள் அமைக்கும் திட்டத்தின் ஒப்பந்த பணிகளை அரசு விதிகளுக்கு மாறாக தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு வழங்கியதாக தெரிய வந்தது.

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விதிமுறைகளை மீறியதால் தமிழக அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    அந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களை கைப்பற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து எந்தெந்த இடங்களில் சோதனை நடத்த வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடுகள், அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வழக்கு சம்மந்தமான ஆவணங்களை கைப்பற்றுவதற்காக சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி பகுதிகளில் 7 இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

    மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் முற்றுகையிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடக்கிறது.

    எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடந்த சோதனைக்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 7 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

    எஸ்.பி.வேலுமணி வீட்டில் திட்டமிட்டு 4-வது முறையாக சோதனை நடத்தப்படுவதாக அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடுகளிலும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அவர் தனது பணி காலத்தில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, மஞ்சக்கரணை கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரிக்கு தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கி உள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    அந்த தனியார் மருத்துவ கல்லூரி உள் நோயாளி படுக்கை வசதியுடன் 2 வருடங்களாக செயல்படுவதாகவும், மேற்படி மருத்துவமனையானது புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என்றும் விஜயபாஸ்கர் அனுமதி வழங்கி உள்ளார் என்று லஞ்ச ஒழிப்பு துறை வெளியிட்டு பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

    மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு முரணாக அனுமதி வழங்கியது தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தினார்கள். சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் தாம்பரம் பகுதிகளில் தலா 1 இடத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    தமிழகத்தில் இதுவரை முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படும்போது யாராவது ஒரு தலைவரின் வீடுகளில்தான் சோதனை நடத்தப்படும். ஆனால் இன்று ஒரே நாளில் 2 அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    2 முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் வீடுகள் என மொத்தம் 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் முற்றுகையிட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த 39 இடங்களிலும் அவர்கள் எதிர்பார்க்கும் ஆவணங்கள் கிடைக்குமா? என்பது இன்று மாலை தெரிந்து விடும்.

    ×