என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒரு முறை தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மறுமுறை தோல்வி அடைவது சரித்திரம்- எஸ்.பி.வேலுமணி
- தி.மு.க.விற்கு இந்த சட்டமன்ற தேர்தலில் யாரும் ஓட்டு போட மாட்டார்கள்.
- மின் கட்டண உயர்வை நினைத்தாலே தி.மு.க.விற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி .வேலுமணி பங்கேற்று பேசியதாவது:-
எஸ்.ஐ.ஆர். என்று அறிவித்ததுமே தி.மு.க.வினர் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். ஆர்ப்பாட்டம் என ஆரம்பித்து விட்டார்கள். அ.தி.மு.க.வை பொறுத்த அளவில் என்றைக்குமே நேர்மையாக தேர்தலை சந்திப்போம். கள்ள ஓட்டு போடுவதெல்லாம் இருக்காது. அ.தி.மு.க.வுக்கு சாதகமான வாக்குகள், பொதுமக்கள் வாக்குகள் சரியான முறையில் சேர்க்க வேண்டும்.
தி.மு.க.விற்கு இந்த சட்டமன்ற தேர்தலில் யாரும் ஓட்டு போட மாட்டார்கள். தமிழ்நாடு முழுவதுமே தி.மு.க. ஆட்சி போய்விடவேண்டும். அ.தி.மு.க., ஆட்சி வரவேண்டும் என ஒட்டுமொத்த குரலாக உள்ளது.
இந்த முறை திருப்பூரில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என சர்வே வைத்துள்ளேன். தி.மு.க. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
மின் கட்டண உயர்வை நினைத்தாலே தி.மு.க.விற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. தி.மு.க.விற்கு எப்பவும் ஓட்டு போடும் அரசு ஊழியர்கள் கூட இந்த ஆட்சி வேண்டாம் என கூறுகிறார்கள். எனவே அ.தி.மு.க. அரசு அமைவது உறுதி. இதுவரையிலும் தி.மு.க. ஆட்சிக்கு இவ்வளவு கெட்ட பெயர் வந்ததில்லை. அவ்வளவு கெட்ட பெயருடன் தி.மு.க. ஆட்சி உள்ளது.
ஒரு முறை தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மறுமுறை நிச்சயம் மிக படுதோல்வி அடையும் என்பதுதான் சரித்திரம் என்றார்.
பின்னர் ஓ.பன்னீர்செல்வம் டிசம்பர் 15ந்தேதிக்குள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள் என தெரிவித்துள்ள கருத்து குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு எஸ்.பி.வேலுமணி பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்றார்.






