என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் - போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
- எங்களது நபர்கள் உங்களுக்கு அருகிலேயே இருக்கிறார்கள்.
- நாங்கள் சொல்லும் பணத்தை நீங்கள் வைத்து விட்டால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
கோவை:
அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளராகவும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் எஸ்.பி.வேலுமணி.
இவர் குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி இவரது வீட்டிற்கு காளப்பட்டி பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரித்து பார்த்தார். அதனை பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அந்த கடிதத்தில், ஜூலை 30-ந் தேதிக்குள் கோவையில் வெடிகுண்டு வெடிப்பு நடத்த உள்ளோம். நாங்கள் உங்களை கொல்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.
எங்களது நபர்கள் உங்களுக்கு அருகிலேயே இருக்கிறார்கள். எங்கள் அமைப்புக்கு பணம் தேவைப்படுகிறது. எனவே நீங்கள் ஒரு கோடி ரூபாய் பணத்தை ஒரு பையில் வைத்து, 25-ந் தேதி 2 மணி முதல் 2.30 மணிக்குள் காளப்பட்டி-வெள்ளானைப்பட்டி ரோடு கலியபெருமாள் குட்டை அருகே உள்ள குப்பை மேட்டில் வைக்க வேண்டும்.
நாங்கள் சொல்லும் பணத்தை நீங்கள் வைத்து விட்டால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அப்படி இல்லையென்றால், 3 மாதத்துக்குள் உங்களையும், உங்கள் குடும்பத்தில் 3 பேரையும் கொல்வோம். இது வெறும் குறுஞ்செய்தி அல்ல. எச்சரிக்கை எனவும் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் அ.தி.மு.க வக்கீல் பிரிவு செயலாளர் தாமோதரன் தலைமையில் இன்று கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரில், எங்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலைமிரட்டல் வந்துள்ளது.
எனவே முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள இந்த சம்பவம் அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






