தமிழ்நாடு
அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டத்தை உருவாக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Published On 2022-01-27 08:15 GMT   |   Update On 2022-01-27 08:15 GMT
ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் செய்யப்பட்டது போன்று தமிழ்நாட்டிலும் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் பல சட்டப் பேரவை தொகுதிகளின் எல்லைகள் இரு மாவட்டங்களில் பரவிக் கிடப்பதால் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை. இவற்றைக் கருத்தில் கொண்டு புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு ஆளுனர் உரையில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 5-ந்தேதி ஆளுனர் உரையில் ஏமாற்றமே மிஞ்சியது.

அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும்; எல்லைகளை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 8-ந்தேதி தமிழக முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கும்பகோணம், விருத்தாசலம் உள்ளிட்ட புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று திமுக அளித்த வாக்குறுதி குறித்தும் சுட்டிக்காட்டியிருந்தேன். அதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெருந்தடையாக இருக்கும்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் செய்யப்பட்டது போன்று தமிழ்நாட்டிலும் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக மாவட்ட மறுவரையறை ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News