செய்திகள்
வைகோ

பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்- வைகோ கோரிக்கை

Published On 2021-11-02 08:17 GMT   |   Update On 2021-11-02 08:17 GMT
ஏற்கனவே காத்திருப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி முன்னுரிமை அளித்து, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சிக் கழகம், இனி, ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு நடத்தித்தான் தேர்வு செய்ய வேண்டும் என, ஆணை பிறப்பித்தது. ஆனால் அந்த அறிவிப்பில், விதி 5-ன்படி, ஏற்கனவே பணி நியமன நடவடிக்கைகளில், சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களுக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வு பொருந்தாது என விதிவிலக்கு அளித்தது.

பதிவு மூப்பு அடிப்படையில், சான்று ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்தபிறகு, 1258 பட்டதாரி தமிழ் ஆசிரியர்கள் உட்பட சுமார் 5000 பேர் பணி நியமனம் கிடைக்கப் பெறாமல் உள்ளனர். அவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

அந்த வழக்கில், ‘2012-க்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்கள், கிளாஸ் 5 விதியின்படி. இனி, ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத வேண்டிய தேவை இல்லை; காலிப்பணி இடங்கள் ஏற்படும்போது, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என தீர்ப்பு அளித்தது.

தற்போது, தமிழ்நாடு முழுமையும் அரசுப் பள்ளிகளில் 6 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்து இருப்பதாக, அரசு அறிவித்து இருக்கின்றது. எனவே, பல்லாயிரக்கணக்கான புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. விரைவில், புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்து இருக்கின்றார்.

இந்தச் சூழ்நிலையில், ஏற்கனவே காத்திருப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி முன்னுரிமை அளித்து, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News