செய்திகள்
பாக்கியலட்சுமி

வில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல்- தி.மு.க. ஆதரவு பெற்ற பாக்கியலட்சுமி வெற்றி

Published On 2021-10-13 02:58 GMT   |   Update On 2021-10-13 02:58 GMT
தி.மு.க. ஆதரவு பெற்ற பாக்கியலட்சுமிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.
கொடைக்கானல்:

கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்த குப்பம்மாள் உடல்நலக்குறைவால் இறந்தார். அதையொட்டி இந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான இடைத்தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 12 ஆயிரத்து 236 வாக்குகளில் 6 ஆயிரத்து 842 வாக்குகள் பதிவானது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

6 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. ஆதரவு பெற்ற பாக்கியலட்சுமி 4 ஆயிரத்து 34 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் செல்வராணி 1,720 வாக்குகளும், அம்பிகா என்பவர் 826 வாக்குகளும், ரேகா என்பவர் 80 வாக்குகளும் பெற்றனர். 182 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

இதையடுத்து பாக்கியலட்சுமிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து பாக்கியலட்சுமி தனது ஆதரவாளர்களுடன் பிரையண்ட் பூங்கா எதிரே உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.


Tags:    

Similar News