search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Local body elections"

    • ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது முருகன் கோட்டைகருங்குளம் பஞ்சாயத்து தலைவர்பதவிக்கு போட்டியிட்டுள்ளார்.
    • தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன என்று விசாாரித்தனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள கோட்டைகருங்குளம் வடிவம்மாள்பட்டியை சேர்ந்தவர் முருகன்(வயது 42). தொழிலாளி.

    இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன என்று விசாாரித்தனர். ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது முருகன் கோட்டை கருங்குளம் பஞ்சாயத்து தலைவர்பதவிக்கு போட்டியிட்டுள்ளார்.

    ஆனால் அதில் அவர் தோல்வி அடைந்துவிட்டார். இதற்காக பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பி செலுத்த முடியாததால் மிகவும் மன வருத்தத்துடன் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே கடன்பிரச்சினை காரணமாக முருகனை அவரது மனைவி திரவுபதி பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் வாழ்வில் வெறுப்படைந்த முருகன் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெற்றி பெற்ற ஆட்டோ டிரைவர் பால்ராஜிடம் வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலர் ராஜம் வழங்கினார்.
    • 148 வாக்குகள் பெற்று நாச்சியார் என்பவர் வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் கண்ணன் வழங்கினார்.

    தென்காசி:

    தமிழகம் முழுவதும் விடுபட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலி பதவியிடங்களுக்கான தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் அம்பை யூனியன், வாகைகுளம் ஊராட்சி 8-வது வார்டுக்கும், சேரன்மகாதேவி யூனியன் உலகன்குளம் ஊராட்சி 1-வது வார்டுக்கும் உறுப்பினர் தேர்வுக்கான தேர்தல் நடந்தது.

    நேற்று காலை வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில் வாகைகுளம் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினராக பால்ராஜ் என்பவர் 70 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பால்ராஜ் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். அவரது வார்டில் மொத்தம் 197 வாக்குகள். ஆனால் அதில் 142 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. அவருக்கு வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலர் ராஜம் வழங்கினார்.

    தென்காசி

    இதேபோல் உலகன்குளம் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினராக ஜெயந்தி என்பவர் 106 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதேபோல் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் மேலப்பாவூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் 4 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 306 வாக்குகள் பதிவான நிலையில் 148 வாக்குகள் பெற்று நாச்சியார் என்பவர் வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் கண்ணன் வழங்கினார். இவர்கள் நாளை மறுநாள்(15-ந்தேதி) பதவி ஏற்கின்றனர்.

    • இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.
    • வெற்றி பெற்றவர்களின் விபரம் அறிவிக்கப்பட்டது.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டத்தில் பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர், டி.வாடிப்பட்டி கிராம ஊராட்சி மன்ற 4வது வார்டு உறுப்பினர் மற்றும் சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னஓவுலாபுரம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 3 உள்ளாட்சி மன்ற பதவிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 9 தேதி நடைபெற்று முடிந்தது.

    வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 10 பேர், டி.வாடிப்பட்டி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர், சின்னஓவுலாபுரம் 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர் என மொத்தம் 15 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

    வடபுதுப்பட்டியில் 9,379 வாக்காளர்கள், டி.வாடிப்பட்டியில் 126 வாக்காளர்கள், சின்னஓவலாபுரத்தில் 480 வாக்காளர்கள் என மொத்தம் 9,872 வாக்காளர்கள் இருந்த நிலையில் 7510 வாக்குகள் மட்டுமே பதிவானது.

    இந்நிலையில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வாடிப்பட்டி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ரவி, 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    • ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 16 பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
    • ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி நடந்து முடிந்துள்ளன. இதைப்போல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 16 பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

    இதில் 3 மனுக்கள் தள்ளுபடியானது. மீதமுள்ள 39 மனுக்கள் ஏற்கப்பட்டன.

    இதில் அந்தியூர் யூனியன் குப்பாண்டம்பாளையம் பஞ்சாயத்து வார்டு–4, நம்பியூர் யூனியன் கெட்டிசெவியூர் பஞ்சாயத்து வார்டு எண்–10, பொலவபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–5.

    பெருந்துறை யூனியன் கருக்குபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–6, சத்தியமங்கலம் யூனியன் உக்கரம் பஞ்சாயத்து வார்டு எண்–4, டி.என்.பாளையம் யூனியன் பெருமுகை பஞ்சாயத்து வார்டு எண்–11,

    கணக்கம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–1, புளியம்பட்டி பஞ்சாயத்து வார்டு எண்–3, தாளவாடி யூனியன் தலமலை பஞ்சாயத்து வார்டு எண்–2 என 9 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    இது தவிர அம்மாபேட்டை யூனியன் சிங்கம்பேட்டை பஞ்சாயத்து வார்டு எண்.2-ல் 2 பேர், பவானி யூனியன் பெரியபுலியூர் பஞ்சாயத்து வார்டு எண்–.3-ல் 4 பேர், பவானிசாகர் யூனியன் தொப்பம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்.–3-ல் 2 பேர், கோபி யூனியன் கோட்டுபுள்ளா ம்பாளையம் பஞ்சாயத்து, வார்டு எண்–1ல் இருவர்,

    மொடக்குறிச்சி யூனியன் 46 புதூர் பஞ்சாயத்து வார்டு எண்.–1-ல் நால்வர், அத்தாணி டவுன் பஞ்சாயத்து வார்டு எண்–.3-ல் 3 பேர், அம்மாபேட்டை டவுன் பஞ்சாயத்து, வார்டு எண்.–2-ல் 3 பேர் என, 7 பதவிக்கு 20 பேர் போட்டியில் உள்ளனர்.

    நாளை(சனிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    இதை ஒட்டி அதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி நடந்து முடிந்துள்ளன. இதைப்போல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து வரும் 12-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 12-ந் தேதியும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இதன்படி, ஈரோடு அருகே 46 புதூர் 1-வது வார்டு பகுதி, ஆணைக்கல்பாளையம், லக்காபுரம், சோலார், மூலப்பாளையம், ரெயில் நிலையம் ஆகிய பகுதியில் உள்ள 12 டாஸ்மாக் கடைகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அம்மாபேட்டை, அத்தாணி, கோபி, பவானிசாகர், அந்தியூர் பகுதியில் உள்ள, 24 டாஸ்மாக் கடைகளுக்கும் இவ்விரு தினங்கள் விடுமுறை விடுக்கப்படுகிறது.

    உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் திமுக வெற்றி பெறும் என்பதால்தான் தள்ளிப்போடுகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். #MKStalin #DMK
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் சீவூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க. சார்பில் ‘மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து ஊராட்சி சபை கூட்டம் நடத்தி மக்களை சந்திக்க வந்திருக்கிறேன். கிராமங்கள்தான் கோவில். நான் பக்தனாக இங்கு வந்திருக்கிறேன். நாங்கள் உங்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகளை கேட்டு அதனை விரைவில் தீர்த்து வைக்க உறுதியோடு வந்திருக்கிறோம்.

    நான் எனது கொளத்தூர் தொகுதிக்கு வாரம் ஒருமுறை சென்று மக்களை சந்தித்து வருகிறேன். சீவூர் ஊராட்சியில் உள்ள இந்த குடியாத்தம் தொகுதி, எம்.எல்.ஏ. இல்லாத அனாதை தொகுதியாக உள்ளது. அ.தி.மு.க.வின் பங்காளி சண்டையால் எம்.எல்.ஏ. இல்லாத தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியை பற்றி பேச 1 வருடமாக எம்.எல்.ஏ. இல்லை.

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. வருகிற ஏப்ரல், மே மாதம் நிச்சயம் வந்துவிடும். பாராளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நிச்சயமாக வர வாய்ப்பு உள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் ஒட்டுமொத்த சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும் வருமோ என்ற சந்தேகம் எங்களுக்கு வந்துள்ளது. அதைத்தான் நீங்களும் எதிர்பார்க்கிறீர்கள். அப்போதுதான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் அதில் தி.மு.க. வெற்றி பெறும் என்பதால்தான் தள்ளிபோட்டு வருகிறார்கள்.

    சட்டசபையில் மெஜாரிட்டிக்கு 117 இடம் வேண்டும். தற்போது அ.தி.மு.க.வின் பலம் 113 ஆக மைனாரிட்டியாக உள்ளது. 10 நாளில் 11 எம்.எல்.ஏ.க்களின் தீர்ப்பு வர உள்ளது. அவர்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து தக்க வைத்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஜெயலலிதாவின் பேரை சொல்லி ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்கள்.



    ஜெயலலிதாவின் இறப்பு மர்மமாக உள்ளது. இதனை விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது. இறப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என அ.தி.மு.க.வின் சட்டத்துறை அமைச்சரே கேட்கிறார். கோடநாடு கொலை சம்பவத்தில் முதல்-அமைச்சருக்கு தொடர்பு உள்ளது என வாக்குமூலம் கொடுக்கிறார்கள். இந்த ஆட்சி லஞ்ச ஆட்சி மட்டுமல்ல, கொள்ளையடிக்கும் ஆட்சி மட்டுமல்ல, கொலைகார ஆட்சியாகவும் நடக்கிறது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என எங்களை விட பொதுமக்களான உங்களுக்குத்தான் அதிக நம்பிக்கை வந்துள்ளது. தமிழக அரசுக்கு முட்டு கொடுக்கும் அரசாக மோடி அரசு உள்ளது. தேர்தலுக்காக தமிழகத்திற்கு மோடி வந்து செல்கிறார். தேர்தல் வாக்குறுதியில் ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்துவோம் என கூறியவர்கள் 15 ரூபாய் கூட வழங்கவில்லை. வருகிற பாராளுமன்ற தேர்தலை நல்ல வாய்ப்பாக பொதுமக்கள் பயன்படுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #MKStalin #DMK
    ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. #JammuAndKashmir #JKElection #LocalBodyPolls
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி கடந்த 8-ம்  தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. நகராட்சி அமைப்புகளில் உள்ள 1,145 வார்டுகளில் முதற்கட்ட 422 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வெறும் 8.3 சதவீத வாக்குகளே பதிவாகின.

    இந்நிலையில், இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 13 மாவட்டங்களில் உள்ள 384 வார்டுகளில் (காஷ்மீரில் 166, ஜம்முவில் 218) தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த வார்டுகளில் மொத்தம் 1094 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் காஷ்மீரில் 61 வேட்பாளர்கள் உள்ளிட்ட 65 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 56 வார்டுளில் யாரும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யாததால் அந்த வார்டுகளில் தேர்தல் நடத்தப்படவில்லை. மற்ற வாக்குச்சாவடிகளில் காலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.



    முதற்கட்ட தேர்தலைப் போன்றே இன்றும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் குறைந்த அளவு வாக்காளர்களே வந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது.

    உள்ளாட்சித் தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 13 மாவட்டங்களிலும் செல்போன் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

    முக்கிய கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன. பிரிவினைவாத அமைப்புகள் தேர்தலை புறக்கணித்திருப்பதுடன் முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #JammuAndKashmir #JKElection #LocalBodyPolls
    கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பதை உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த தேர்தல் பார்க்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

    இந்த தேர்தல் முடிவு குறித்து கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி கூறியதாவது:-

    வழக்கமாக நகர் பகுதிகளில் பாரதிய ஜனதா தான் அதிக இடங்களில் வெற்றி பெறும். ஆனால் இந்த தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

    காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். கூட்டணி மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 2013-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் 1960 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா மற்றும் ஜே.டி.எஸ். கட்சிகள் தலா 905 இடங்களில் வெற்றி பெற்றன.

    தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி 982 இடங்களையும், பாரதிய ஜனதா 929 இடங்களையும், ஜே.டி.எஸ். கட்சி 373 இடங்களையும் பிடித்துள்ளன.

    சுயேட்சை வேட்பாளர்கள் 329 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கூட்டணி ஒட்டுமொத்தமாக 1357 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கர்நாடகாவில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று பாரதிய ஜனதா தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். #KarnatakaLocalBodyElections
    பெங்களூரு:

    கர்நாடகாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மைசூரு, தும்கூரு, சிவமொக்கா ஆகிய 3 மாநகராட்சிகளில் சிவமொக்கா மாநகராட்சியை பாரதிய ஜனதா பிடித்துள்ளது. மைசூரு, தும்கூரு ஆகிய 2 மாநகராட்சிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி மேயர் பதவிகளை கைப்பற்றுகிறது.

    இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் முடிவு குறித்து கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா கூறியதாவது:-

    உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaLocalBodyElections
    ×