செய்திகள்
கொரோனா தடுப்பூசி

மலை கிராமத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்கும் பழங்குடியின மக்கள்

Published On 2021-06-02 07:23 GMT   |   Update On 2021-06-02 07:23 GMT
கடந்த 2 வாரத்தில் மலைக்கிராமங்களில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டதில் 45 வயதை கடந்தவர்கள் 200 பேர், 18 முதல் 44 வயதுக்குள்ளானவர்கள் 25 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
திருச்சி:

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மக்களை நிலைகுலைய செய்து விட்டது. பலமடங்கு உயர்ந்த தொற்றாளர்கள் எண்ணிக்கை, இறப்புகள் மக்களிடையே அதிகம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தொற்று ஏற்பட்டாலும் உயிரை காப்பாற்ற தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதை நகர்ப்புற மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இதனால் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். ஆனால் கிராமங்களில் இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள்.

மலை கிராமங்களில்  கொரோனா தடுப்பூசி   செலுத்துவது சுகாதாரத்துறையினருக்கு பெரும் சவாலாக இருப்பதாக டாக்டர் சம்பத் என்பவர் தெரிவித்துள்ளார்.

திருச்சி பச்சைமலை மலைப்பகுதியில் உள்ள சேம்பர் கிராமத்திற்கு கடந்த 17-ந்தேதி டாக்டர் சம்பத் தலைமையிலான மருத்துவ குழுவினர் காய்ச்சல் சிறப்பு பரிசோதனை முகாம் நடத்துவதற்காக அங்கு சென்றனர். அங்கு ஒன்றிரண்டு பேர் மட்டுமே இருந்தனர். பெரும்பாலான வீடுகளில் மக்கள் இல்லை. காய்ச்சல் இருந்தால் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விடுவார்கள் என பயந்து குழந்தைகளுடன் வயல்களுக்கு தப்பிச்சென்று விட்டதை அறிந்த மருத்துவ குழு அதிர்ச்சிக்குள்ளானது.

இது போன்று அந்த மலைக்கிராமத்தில் தடுப்பூசி போடுவதற்கும் பழங்குடி மக்களிடம் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேதனை தெரிவித்தனர்.

பச்சைமலையில் 16 கிராமங்களில் 4000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 800 பேர் 45 வயதை கடந்தவர்கள். இவர்களில் கடந்த சில வாரங்களில் 170 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தியபோது 85 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.



இதுவரை 225 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட முடிந்தது. இதுபற்றி பச்சைமலை செங்காட்டுபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் டாக்டர் கூறும்போது, காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசியின் பயன்கள் குறித்து எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பரிசோதனைக்கும், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கும் பழங்குடி மக்கள் தயங்குகிறார்கள்.

கடந்த 2 வாரத்தில் மலைக்கிராமங்களில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டதில் 45 வயதை கடந்தவர்கள் 200 பேர், 18 முதல் 44 வயதுக்குள்ளானவர்கள் 25 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

மக்கள் முகாம்களுக்கு வராததால் மருத்துவ குழுவினர் வீட்டு வாசலை தட்டினர். ஆனால் அதற்கும் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. நாம் பேசுவதை செவிமடுத்து கேட்காமல் வயல்களுக்கே ஓடினர். தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும். இறப்பு ஏற்படும் என கருதி தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசி மருந்து திருப்பி சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மலைக்கிராமங்களில் கூடுதல் முகாம்கள் நடத்தினால் அதிகம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியும் என தென்புறநாடு பஞ்சாயத்து தலைவர் பானு மது கூறினார்.
Tags:    

Similar News