செய்திகள்
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

காய்கறி மார்க்கெட்டுகளில் 1 லட்சத்து 124 விற்பனையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Published On 2020-10-01 08:11 GMT   |   Update On 2020-10-01 08:11 GMT
சென்னை மார்க்கெட்டுகளில் தொற்று பரவாமல் தடுக்க காய்கறி விற்பனையாளர்கள் 1 லட்சத்து 124 விற்பனையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை:

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் தலைமைச்செயலகத்தில் நடந்தது.

கொரோனா தடுப்பு பணிகளின் நிலை, வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விரைவாக நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் சென்னையில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 17 முதல் தற்போது வரை 1 லட்சத்து 66 ஆயிரத்து 29 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 641 பேர் குணமடைந்துள்ளனர். இது 91 சதவீதம் ஆகும். தற்போது 11 ஆயிரத்து 193 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று முன்தினம் வரை 14 லட்சத்து 13 ஆயிரத்து 469 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இதில் 7 லட்சத்து 8 ஆயிரத்து 891 பரிசோதனைகள் மாநகராட்சி களப்பணி மூலம் சேகரிக்கப்பட்டதாகும். நாட்டிலேயே அதிகமான பரிசோதனையை சென்னை மாநகராட்சி செய்துள்ளது.

சென்னையில் தற்போது வரை 53 ஆயிரத்து 495 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 27 லட்சத்து 45 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சியில் தான் அதிக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

காய்கறி மார்க்கெட்டுகளில் 1 லட்சத்து 124 விற்பனையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களுக்கு நோய்தொற்று பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் உயர் அதிகாரிகள் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஹர்மந்தர்சிங், ஹரிகரன், பாஸ்கரன், கே.எஸ்.பழனிசாமி, எஸ்.பழனிசாமி, சந்திரகலா, பிரபுசங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News