உள்ளூர் செய்திகள்

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று திடீர் மழை

Published On 2024-05-08 06:18 GMT   |   Update On 2024-05-08 06:19 GMT
  • திருவையாறு சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டின.
  • சீர்காழியில் இடி, மின்னலுடன் கருமேகங்கள் சூழ்ந்து உள்ளதால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தஞ்சாவூர்:

தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாவே கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக சுட்டெரித்தது. பகலில் கடும் வெப்ப அலை வீசியதால் மக்கள் அவதியடைந்து வந்தனர்.

தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் வரலாறு காணாத வெப்பத்தால் அனைவரும் பாதிக்கப்பட்டனர். தினமும் 100 டிகிரியை தாண்டி வெப்பத்தின் அளவு பதிவானது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கினர்.

இந்த நிலையில் இன்று காலை தஞ்சையில் வழக்கத்திற்கு மாறாக குளிர்ந்த காற்று வீசியது. சிறிது நேரத்தில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து சில நிமிடம் மிதமான அளவில் மழை பெய்தது. பின்னர் வெயில் அடித்தது. இதேப்போல் திருவையாறு சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டின.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் இன்று காலை காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கொள்ளிடம் புத்தூர், தைக்கால், ஆச்சாள்புரம், புதுப்பட்டினம், சந்தபடுகை, திட்டுபடுகை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. சீர்காழியில் இடி, மின்னலுடன் கருமேகங்கள் சூழ்ந்து உள்ளதால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதேப்போல் நாகை மாவட்டம் நாகூர், பணக்குடி, மஞ்சக்கொல்லை, புத்தூர், சிக்கல் உள்ளிட்ட பல இடங்களிலும் கோடை மழை பெய்து குளிர்வித்தது.

தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் பெய்த மழையால் பூமி குளிர்ந்ததோடு வெப்பம் ஒரளவு தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும்கோடை குறுவை சாகுபடி செய்திருந்த விவசாயிகள் மும்முனை மின்சாரம் இன்றி பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் குறுவை விதைப்புகள் கருகி வந்ததால் வேதனையில் இருந்த நிலையில் தற்போது பெய்த கோடை மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News