உளுந்தூர்பேட்டை வட்டார கல்வி அலுவலகத்தில் தீ விபத்து - புத்தகங்கள் எரிந்து சேதம்
- உளுந்தூர்பேட்டையில் வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது.
- பல லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் தீயில் எரிந்து கருகி சேதமானது.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் தொடக்க கல்வி அலுவலகமும் இயங்கி வந்தது.
இந்த நிலையில் இந்த அலுவலகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள முதல் பருவம், 2-ம் பருவம், 3-ம் பருவம் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை அறிந்த அலுவலக ஊழியர்கள் உடனடியாக உளுந்தூர்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்து கட்டுக் குள் கொண்டு வந்தனர்.
இதில் அலுவலகத்தில் இருந்த பல லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் தீயில் எரிந்து கருகி சேதமானது.
மேலும் தீ விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டதா அல்லது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.