ஊட்டி அரசினர் ரோஜா பூங்காவில் தோட்டக்கலை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
- பணிநிலை மற்றும் ஊதிய விஷயங்களில் போதிய முன்னேற்றம் இல்லை.
- எங்களின் கோரிக்கைகளை அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் வேலை பார்க்கும் தோட்டக்கலைத்துறை பூங்கா ஊழியர்கள் மற்றும் பண்ணை பணியாளர்கள் ஆகியோர் தினக்கூலி மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறியதாவது:-
நீலகிரி, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள 58 பூங்கா மற்றும் பண்ணைகளில் கடந்த 1986-ம் ஆண்டு முதல் தினக்கூலி அடிப்படையிலும், சிறப்பு காலமுறை ஊதியத்திலும் நாங்கள் பணியமர்த்தப்பட்டு வேலை பார்த்து வருகிறோம். ஆனாலும் எங்களின் பணிநிலை மற்றும் ஊதிய விஷயங்களில் போதிய முன்னேற்றம் இல்லை.
தோட்டக்கலைத் துறையில் பணியாற்றும் சிலர் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்யப்பட்டு இருந்தாலும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருப்பதால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளோம்.
எனவே சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். மேலும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோருக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும், தினக்கூலி பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் நிர்ணயம் செய்த ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். எங்களின் கோரிக்கைகளை அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.