தமிழ்நாடு செய்திகள்

Gas Shortage | சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Published On 2026-03-11 15:29 IST   |   Update On 2026-03-11 15:31:00 IST
  • உணவகங்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
  • வளைகுடா நாடுகளில் 19 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

மேற்காசியப் போரால் ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாட்டை சரிசெய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மேற்கு ஆசியப் போர் காரணமாக ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால், மிகவும் தொழில்மயமான தமிழ்நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மாண்புமிகு பிரதமர் அவர்கள் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டில் அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய, இதுதொடர்பான துறையினருக்கு உத்தரவிட வேண்டும்.

மேற்காசியாவில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்குச் சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்க!

வளைகுடா நாடுகளில் 19 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான உதவி எண்களைத் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இதுவரை உதவி கோரி 2,600 அழைப்புகள் வந்துள்ளன. பெரும்பாலானோர் தாயகம் திரும்புவதற்கான விமான ஏற்பாடுகளைக் கோரியுள்ளனர். அதில் ஆயிரம் பேரின் தகவல்களைச் சேகரித்து ஏற்கெனவே வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் பகிர்ந்துள்ளோம்.

பலர் அருகில் உள்ள வேறு நாடுகளில் இருந்து இந்தியா வர வேண்டியுள்ளதால் அவர்களுக்கான விசா உதவிகளையும் செய்ய வேண்டியுள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 593 மீனவர்களும் இரான் நாட்டில் சிக்கியுள்ளனர்.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, மேற்காசியாவில் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வருவதற்கான சிறப்பு விமானங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

*மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோக அளவுக் கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

உலகளவில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டின் காரணமாக 'அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1995' அமல்படுத்தப்பட்டுள்ளதை வரவேற்கும் அதேவேளையில், மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோகத்தைக் கடந்த 6 மாதங்களில் அவர்கள் பயன்படுத்திய அளவில் 65% என நிர்ணயித்திருப்பதை மறுபரிசீலிக்க வேண்டுகிறேன்.

குளிர்காலங்களில் குறைந்த அளவில்தான் இந்த மின்நிலையங்கள் எரிவாயுவைப் பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால், எதிர்வரும் கோடைக்காலத்தில் மின் நுகர்வு உச்சத்தை எட்டும் என்பதால் அவர்களுக்கான எரிவாயு தேவை கூடும்.

மேலும், இப்போது வரை எரிவாயுவைப் பன்படுத்தி வந்த உணவகங்கள் உள்ளிட்ட நுகர்வோரும் தற்போதுள்ள தட்டுப்பாட்டினால் இனி மின்சாரத்தை நாடுவார்கள் என்பதால் மின்சாரத் தேவை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

எனவே, 'கடந்த 6 மாதப் பயன்பாட்டில் 65%' என்பதை மாற்றி, கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் பயன்படுத்திய அளவில் 65% என எரிவாயு விநியோக அளவை மாற்றியமைக்க வேண்டும் எனக் கோருகிறேன்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News