செய்திகள்
எய்ம்ஸ் மருத்துவமனை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அரசிதழில் வெளியீடு- தென்மாவட்ட மக்கள் வரவேற்பு

Published On 2020-07-05 07:32 GMT   |   Update On 2020-07-05 07:32 GMT
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதற்கு தென்மாவட்ட மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மதுரை:

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தது. அதன்பின் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. கடந்த ஆண்டு ஜனவரி 27-ந் தேதி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதனை தொடர்ந்து மதுரை தோப்பூரில் 262.62 ஏக்கர் பரப்பளவில் ரூ. 1264 கோடியில், 750 படுக்கைகளுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்காக ஜப்பான் நாட்டு நிதி உதவியும் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மருத்துவமனையின் முதல்கட்ட பணிகளான சுற்றுச்சுவர், சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் மத்திய அரசு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

இது மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் வரவேற்பும் தெரிவித்து இருக்கிறார்கள். இதுபோல் அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகளும் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

இனியாவது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவில் தொடங்கி விரைவுபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

இதுகுறித்து மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசன் கூறியதாவது:-

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்த காலத்தில் இருந்து தற்போது வரை அங்கு நடைபெறும் ஒவ்வொரு பணிகளையும் துல்லியமாக கவனித்து கொண்டிருக்கிறோம். தற்போது மத்திய அரசு அதனை அரசிதழில் வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. இதன் மூலம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டி இருந்தாலும் இதுநாள்வரை உறுதி செய்யப்படாத நிலையில் இருந்த எய்ம்ஸ் மருத்துவமனை பற்றிய குறிப்பு, அரசிதழில் வெளியிட்டதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மதுரை மக்கள் மட்டுமின்றி தென்மாவட்ட மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி.

இந்த அறிவிப்பிற்கு பின்பு ஜப்பான் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்திய அரசுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதற்கான நிதி உதவியை அதிகாரப்பூர்வமாக அளிக்கும். இன்னும் ஒரு சில மாதங்களில் கட்டுமான பணிகள் திட்டமிட்டபடி தொடங்கும். இந்த பணி மீண்டும் மும்முரமாக நடக்க அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News