செய்திகள்
திருமாவளவன்

பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வதே சிறந்த தீர்வாகும்- திருமாவளவன்

Published On 2020-06-05 13:20 GMT   |   Update On 2020-06-05 13:20 GMT
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபடுவதற்கு தாங்களாகவே ஒவ்வொருவரும் தங்களை தற்காத்து கொள்வதே தீர்வாகும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.
பெரம்பலூர்:

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரம்பலூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 80 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் 7-வது இடத்தில் இந்தியா உள்ளது. இதுவரை 6 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இந்திய அளவில் தமிழகம் 10 இடத்திற்குள் உள்ளது. தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மிகக்குறைந்த அளவே பரிசோதனை செய்யப்பட்டுள்ளதால் குறைந்த அளவே வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு உரிய காலத்தில் அடிப்படை வசதியான மருத்துவ வசதி, கட்டமைப்பு வசதிகளை அரசு செய்யவில்லை. இதன் காரணமாக சமூக பரவல் தற்போது அதிகமாக ஏற்பட்டு வருகிறது.

வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபடுவதற்கு தாங்களாகவே ஒவ்வொருவரும் தங்களை தற்காத்து கொள்வதே தீர்வாகும். எனவே அரசு என்ன செய்தது, ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள் என்று எண்ணுவதை விட தன்னைத்தானே தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

முழு ஊரடங்கால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடிக்கு தற்சார்பு பொருளாதார திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் உடனடியாக மக்களுக்கு நிவாரணம் போய்ச் சேரவில்லை என்பது பெருத்த ஏமாற்றத்தை தருகிறது.

மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மத்திய அரசு உருப்படியாக எந்த நிலைப்பாட்டையும், செயல்திட்டத்தையும் வரையறுக்கவில்லை என்பது மிகுந்த வேதனையாக உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சென்னை கோயம்பேடு தொழிலாளர்களால் தான் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. அப்போதே அரசு அத்தொழிலாளர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தவறி விட்டது. சொந்த ஊருக்கு திரும்பிய சென்னை கோயம்பேடு தொழிலாளர்களை மாவட்ட நிர்வாகம் விரைவாக அடையாளம் கண்டு சிகிச்சை அளிக்கவில்லை. இதனால் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் பரிசோதனை கருவிகள் போதுமான அளவில் இல்லை. மேலும் தேவையான அளவிற்கு படுக்கை வசதிகள் உருவாக்கப்படவில்லை. இதனால் மத்திய அரசு உரிய மருத்துவ வசதிகளை செய்து கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் அளிப்பதோடு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதன் மூலம் தான் மருத்துவ கருவிகளை வாங்கி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும்.

கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். கிருமி நாசினி தெளிக்க வேண்டும். விதிமுறைகளை கடைப்பிடித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

ஊரடங்கால் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள ஏழை தொழிலாளர்கள், நாடோடிகள், மாற்றுத்திறனாளிகள், இலங்கை அகதிகள், ஆகியோருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
Tags:    

Similar News