செய்திகள்
கனிமொழி

கொரோனாவை கண்டறிய விமான நிலையங்கள் அருகில் ஆய்வு மையம் அமைக்க வேண்டும்- கனிமொழி

Published On 2020-03-06 05:37 GMT   |   Update On 2020-03-06 05:37 GMT
கொரோனாவை கண்டறிய விமான நிலையங்கள் அருகில் ஆய்வு மையம் அமைக்க வேண்டும் என்று பாராளுமன்ற மக்களவையில் கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை:

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வரும் நிலையில் இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்‌ஷவர்தன் மக்களவையில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

அப்போது கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

“மத்திய அமைச்சர் அளித்துள்ள விளக்கத்தில், கடந்த ஜனவரி மாதமே கொரோனா குறித்த எச்சரிக்கை விடப்பட்டது என்றும் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதற்காக அவரைப் பாராட்டுகிறோம்.

ஆனால் மத்திய மந்திரி தன் உரையில் இந்தியாவிலேயே புனேயில் இருக்கும் தேசிய வைராலஜி ஆய்வு நிலையம் ஒன்று மட்டுமே உள்ளது என்று குறிப்பிட்டார். இது போதாது. ஏனென்றால் கொரோனா என்பது உலக அளவிலான அச்சுறுத்தலாக உள்ளது. இதை எதிர் கொள்ள இதுகுறித்து ஆராய்ச்சிகள் செய்ய நாட்டில் மண்டலத்துக்கு ஒரு ஆய்வு மையம் அமைக்கப்பட வேண்டும்.

விமான நிலையங்களில் கொரோனா தாக்கம் இருப்பதாக சந்தேகிக்கப்படுவர்களை நகர்ப்புறத்துக்குள் உள்ள மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கிறார்கள். இந்த வைரஸ் பரவும் வேகம் அதிகம் என்பதால் விமான நிலையங்களுக்கு அருகிலேயே தனிமைப்படுத்தப்பட்ட பாதுகாப்பான சிகிச்சை மையங்களை உருவாக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறியும் தெர்மல் சோதனை நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் இன்னும் செய்யப்படவில்லை என்று அறிகிறேன்.

வெளிநாட்டில் இருந்து வருகிறவர்களை வரவேற்க நான் விமான நிலையம் சென்றிருந்தேன். அவர்களுக்கு தெர்மல் ஸ்க்ரீனிங் செய்யப்படவே இல்லை. அதைத் தொடர்ந்த சோதனைகளும் செய்யப்பட வில்லை. நாட்டில் கொரோனா பற்றிய அச்சம் பரவி வரும் நிலையில் மாஸ்க் எனப்படும் முககவசம் போதுமான அளவு இல்லை. இதுகுறித்தும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

Tags:    

Similar News