செய்திகள்
கோப்பு படம்

கைது செய்ய வந்த சப்-இன்ஸ்பெக்டரின் பைக்கை திருடி ஓட்டிச் சென்ற கொள்ளையன்

Published On 2020-02-05 05:47 GMT   |   Update On 2020-02-05 05:47 GMT
வீட்டு முன்பு நிறுத்திவிட்டு கைது செய்ய வந்த போது சப்-இன்ஸ்பெக்டரின் பைக்கை திருடி ஓட்டிச் சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

திருமலை:

மதனப்பள்ளி 2-டவுன் போலீஸ் நிலையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் உதயக்குமார். இவர் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.

தம்பலப்பள்ளி பகுதியில் சமீபத்தில் ஒரு வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த திருட்டு சம்பவத்தில் கொள்ளையன் உதயக்குமார் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

தம்பலப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனது மோட்டார் சைக்கிளில் மதனப்பள்ளிக்கு வந்து உதயக்குமாரை கைது செய்வதற்காக அவரின் வீட்டின் அருகில் காத்திருந்தார்.

இந்த தகவலை அறிந்த உதயக்குமார் வீட்டின் பின்பக்கமாக சுற்றுச்சுவர் ஏறி குதித்து தெருவுக்கு வந்தார். தெருவில் நிறுத்தப்பட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளின் பூட்டை உடைத்து அதை இயக்கி அதிலேயே உதயக்குமார் தப்பிச் சென்று தலைமறைவானார். பைக் சத்தம் கேட்டு வெளியே எட்டி பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் தனது பைக்கில் உதயக்குமார் தப்பி செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவரை பிடிக்க விரட்டி சென்றார். ஆனால் உதயக்குமார் பைக்கில் வேகமாக சென்றுவிட்டார்.

இதுகுறித்து தம்பலப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தும் உதயக்குமாரை காணவில்லை.

இந்த நிலையில் குர்ரம்கொண்டா அடுத்த சிட்டிப்போயனப்பள்ளி அருகில் உள்ள சாய்பாபா கோவிலில் நுழைந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை உதயக்குமார் கொள்ளையடித்த காட்சிகள் அங்கிருந்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News