செய்திகள்
கோப்பு படம்

சீனாவில் இருந்து திரும்பி வந்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 5 பேரை சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு

Published On 2020-02-01 14:04 GMT   |   Update On 2020-02-01 14:04 GMT
சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து அங்கு இருந்து திரும்பி வந்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 5 பேரை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தென்காசி:

சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் சீனாவில் இருந்து வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சீனாவில் இருந்து தமிழகம் திரும்பும் மாணவர்கள் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்தில் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில் அரசு சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கெரோனா வைரஸ் அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, உடல் வலி, மூச்சுதிணறல் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளன. நெல்லை அரசு மருத்துவமனையிலும் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 3 டாக்டர்களுடன் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

நெல்லை, தென்காசி மாவட்ட சுகாதாரத்துறையினர் சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களின் பட்டியலை எடுத்து அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனாவில் இருந்து தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மற்றும் கடையநல்லூர் பகுதிகளை சேர்ந்த 5 பேர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதுகுறித்த தகவல் தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சுகாதாரத்துறையினர் அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் 5 பேரும் தொடர்ந்து 28 நாட்கள் கண்காணிக்கப்பட உள்ளனர். பொது மக்களிடையே அச்சம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக சுகாதாரத் துறையினர் அவர்களை ரகசியமாகவே கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து சங்கரன் கோவில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் வரதராஜன் கூறியதாவது:-

சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடியவர்கள் அனைவரும் சுகாதாரத்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தென்காசிக்கு வந்துள்ள 5 பேருக்கும் எங்களின் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு கெரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இருந்தபோதிலும் தொடர்ந்து அவர்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் அவரவர் வீட்டிலேயே வைத்து கண்காணிக்கப்படுகிறார்கள். தொடர்ந்து 28 நாட்கள் கண்காணிக்கப்படுவார்கள். அதுவரை அவர்கள் வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களை தினமும் மருத்துவ குழுவினர் சந்தித்து அறிவுரை கூறுவதோடு அவர்களுக்கு ரத்த பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்வார்கள். உடல் நிலையையும் தினமும் கண்காணிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் வீட்டை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், உடைகளை வெந்நீரில் போட்டு தூய்மைப்படுத்தி அணிய வேண்டும் என அவர்கள் 5 பேருக்கும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News