செய்திகள்
நெல்லை கண்ணன்

நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

Published On 2020-01-10 11:26 GMT   |   Update On 2020-01-10 11:26 GMT
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணனுக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
நெல்லை:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு கடந்த 29-ந்தேதி மேலப்பாளையத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நெல்லை கண்ணன் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.

இதையடுத்து அவரை நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 13-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். 

இதற்கிடையே, தான் பேசியது தவறான முறையில் புரிந்து கொள்ளாப்பட்டது தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நெல்லை கண்ணன் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

நெல்லை கண்ணன் மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு இவ்வழக்கை ஜனவரி 20-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில், நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நெல்லை கண்ணனுக்கு இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
Tags:    

Similar News