செய்திகள்
விக்கிரமராஜா

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 17-ந்தேதி ஆர்ப்பாட்டம்- விக்கிரமராஜா பேட்டி

Published On 2019-12-12 12:20 GMT   |   Update On 2019-12-12 12:20 GMT
தமிழகம் முழுவதும் ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் குமரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் குலசேகரத்தில் நடை பெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆன்லைன் வர்த்தகத்தால் இந்திய அளவில் ஒட்டு மொத்த வணிகமும் பாதிக்கப்பட்டு வியாபாரம் சீர்குலைந்து வருகிறது. ஆன்லைன் வர்த்தகத்தால் தற்போது 37 சதவீதம் வரை சிறுவணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர் என நினைக்கக்கூடாது. ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகம் முடங்கி கடைகள் மூடப்பட்டால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொழில் வரியும், அரசுக்கு விற்பனை வரியும் கிடைக்காத சூழல் ஏற்பட்டு, அரசாங்கம் திவாலாகக் கூடிய நிலை ஏற்படும்.

எனவே ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து வருகிற 17-ந்தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஜி.எஸ்.டி. வரியில் நிலவும் குறைபாடுகள் நீக்கப்படும் என்று கூறி வந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இப்போது நிதி ஆதாரத்தைப் பெருக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட் டுள்ளதாக செய்திகள் வருகின்றன. எனவே ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை மேலும் அதிகரித்தால் மிகப் பெரிய அளவில் தொடர் போராட்டங்களை நடத்துவோம். நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் வெங்காயம் தொடர்பான கேள்விக்கு அளித்த பதிலில் அரசியல் இருப்பதாக கருதவில்லை.

அதே வேளையில் வெங்காயமும், பூண்டும் பயன்படுத்தாமல் யாரும் இருக்க முடியாது. வெங்காயம் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி வணிகர்களும் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளோம். இது போன்று விலை உயர்வுகள் எதிர்காலத்தில் ஏற்படாத வகையில் அரசாங்கம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நடிகர் விஜய் சேதுபதி ஆன்லைன் வணிகத்திற்கு ஆதரவான விளம்பரத்தில் நடித்துள்ளது ஏற்புடையதல்ல. வணிகர்களின் ஆதரவின்றி எந்தத் திரைப்படமும் வெற்றி பெற முடியாது. விஜய் சேதுபதியின் சமீபத்திய திரைப்படம் தோல்வியைத் தழுவி உள்ளது. விஜய் சேதுபதி தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.

மார்த்தாண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் காரணமாக அந்த நகரில் வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலத்தின் கீழே பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் வகையில் சர்வீஸ் சாலையை அகலப்படுத்தவில்லை. எனவே உடனடியாக சர்வீஸ் சாலையை விரிவாக்கம் செய்யாவிட்டால் மேம்பாலத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News