செய்திகள்
திருமாவளவன்

இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக திருமாவளவன் மீது வழக்கு- பெரம்பலூர் போலீசார் நடவடிக்கை

Published On 2019-11-20 13:02 GMT   |   Update On 2019-11-20 13:02 GMT
இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் நகர இந்து முன்னணி பொதுச் செயலாளர் கண்ணன், பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேசும்போது, திட்டமிட்டு இந்து தெய்வங்களை இழிவுப்படுத்தியுள்ளார்.

வேண்டுமென்றே அவர் இந்துமத உணர்வுகளையும், அதன் நம்பிக்கைகளையும் அவமதித்துள்ளார். அவரது பேச்சு மதக்கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது. இந்துக்களின் மத நம்பிக்கை மற்றும் வழிபாடு சார்ந்த வி‌ஷயங்களை தொடர்ந்து இழிவுப்படுத்தி வருகிறார். அவர் பேசும் வீடியோ காட்சி இந்துக்கள் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது.

இத்தகைய செயல்களில் எம்.பி. ஈடுபடுவது அவருடைய பிரமாண உறுதி மொழிக்கு விரோதமானது. எனவே அவர்மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து மதம் மற்றும் இனம் குறித்து பேசி வகுப்புவாதம், பகைமையை ஊக்குவித்தல், மதத்தை அவமதிக்கும் நோக்கத்தில் அசிங்கப்படுத்துவது, மத உணர்வை புண்படுத்தும் நோக்கத்துடன் வார்த்தைகளை கூறுதல், அமைதியை குலைக்கும் நோக்கத்தில் அவமதிப்பாக பேசுதல் போன்ற சட்டப்பிரிவின் கீழ் திருமாவளவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் தமிழகத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருமாவளன் எம்.பி. மீது, இந்து மக்கள் கட்சி சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News