செய்திகள்
பரிமளா - கனகலட்சுமி

மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு வழங்குவது பாராட்டுக்குரியது - பக்தர்கள் மகிழ்ச்சி

Published On 2019-11-08 07:45 GMT   |   Update On 2019-11-08 07:45 GMT
திருப்பதியைப் போன்று மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு வழங்குவது பாராட்டுக்குரியது என்று பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோவிலில் முதன்முதலாக லட்டு பிரசாதம் பெற்ற பக்தர்கள் கூறியதாவது:-

பர்வத வர்த்தினி (தெற்கு ஆவணி மூலவீதி, மதுரை):-

திருப்பதியைப் போன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு உள்ளது. கோவிலில் இன்று வழங்கப்பட்ட முதல் லட்டை நான் பெற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதை என் வாழ்நாளில் கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன். கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் மிகவும் புனிதமானது. நண்பகல் வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் பெரும் விருந்தாக அமையும் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பக்தர்களுக்கு லட்டு வழங்கும் கோவில் நிர்வாகத்தின் செயல் பாராட்டுக்குரியது.

கனகலட்சுமி (ஆரப்பாளையம்):- திருப்பதி கோவிலுக்கு இணையாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு வழங்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. சிலர் லட்டு மிகவும் சிறியதாக இருப்பதாக கூறுகிறார்கள். லட்டு சிறியதா, பெரியதா? என்பதை பார்க்கத் தேவையில்லை. கோவிலில் வழங்கப்படும் பிரசாதமாகத் தான் அதைப்பார்க்க வேண்டும். சிறிய அளவில் தந்தாலும் அது பக்தர்களின் உள்ளத்தை மகிழ்விக்கும். லட்டு வழங்க முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் பக்தர்களின் சார்பில் பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பரிமளா (ஜெய்ஹிந்த் புரம்):- மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு வழங்கப்படுவது மிகவும் பாராட்டுக்குரியது. இங்கு வழங்கப்படும் லட்டு, திருப்பதி லட்டைப் போன்று மிகவும் சுவையாக உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தொடர்ந்து லட்டு வழங்க வேண்டும்.

கார்மேகம் (ஆழ்வார்புரம்):- மீனாட்சி அம்மன் கோவிலில் தீபாவளி முதல் லட்டு வழங்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் வேறு தேதியில் லட்டு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று கூறி விட்டனர். இதனால் தீபாவளிக்கு கோவிலுக்கு வந்த நான் அம்மனின் பிரசாதம் கிடைக்காமல் திரும்பிச் சென்றேன். இன்று முதல் லட்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பு மீனாட்சி அம்மன் பக்தர்களை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தி உள்ளது. இன்று வழங்கப்பட்ட லட்டை பெற்றுக் கொண்டதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

Tags:    

Similar News