செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்துக்கு பிரதமர் மோடி வேட்டி அணிந்து வந்தது ஏன்? - உதயநிதி ஸ்டாலின்

Published On 2019-10-16 04:19 GMT   |   Update On 2019-10-16 04:19 GMT
தமிழகத்துக்கு பிரதமர் மோடி வேட்டி அணிந்து வந்ததற்கான காரணம் குறித்து விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக பிரசாரம் மேற்கொண்டார்.

மாம்பழம்பட்டு, கக்கனூர், வீரானூர், அதனூர், தென்னமாதேவி, உடையாநத்தம், பழைய கருவாச்சி, வெள்ளையாம்பட்டு, பெருங்களம் பூண்டி, ஆசூர், தென்பேர், நந்திவாடி, முட்டத்தூர், திருவந்திபுரம், நங்காத்தூர் ஆகிய கிராமங்களில் திறந்த வேனில் சென்று தீவிர ஓட்டு வேட்டை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்களிடம் மிகப்பெரிய எழுச்சி உள்ளது. ‘வெற்றி நமதே’ என்று ஆதரவை தருகின்றனர். முதல்-அமைச்சரின் பெயர் கூட இங்கிருக்கும் மக்களுக்கு தெரியவில்லை. அப்படிபட்டவர் தான் ஆட்சி பொறுப்பில் உள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று அவரே சொல்லிக்கொள்கிறார்.

தமிழ்நாட்டுக்கு வருவதற்கு பிரதமர் மோடிக்கு பயம். அதனால்தான் தன்னை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக அவர் வேட்டி அணிந்து வந்து போயிருக்கிறார்.

பிரதமர் மோடியின் எடுபிடியாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். அவர்களின் கூட்டணிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் சரியான சவுக்கடி கொடுத்தீர்கள். அதேபோன்று அவர்கள் கூட்டணிக்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும்.

ஒரு முதல்-அமைச்சர் எப்படி இறந்தார்? என்பதை தெரிவிக்க வேண்டிய பொறுப்பு ஆளும் ஆட்சிக்கு இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா எப்படி இறந்தார்? என்பதை இதுவரை அவர்கள் தெரிவிக்கவில்லை. அது மர்மமாகவே இருக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல்வேலை, ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மம் வெளிக்கொண்டு வரப்படும்.

மக்களை பற்றி கவலைப்படாத அ.தி.மு.க. ஆட்சிக்கு இந்த இடைத்தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும். தி.மு.க.வேட்பாளரை நீங்கள் தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பி வைத்தால் இந்த தொகுதியில் உள்ள பிரச்சினைகளை உங்கள் குரலாக சட்டசபையில் பேசி அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார்.

தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள்தான் இருக்கிறது. நமது கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு தேர்தல் வருபவர்கள் நாங்கள் கிடையாது. எப்போதும் மக்களோடு பணியாற்றுகிற கட்சி தி.மு.க., இந்த ஆட்சி மீதுள்ள அதிருப்தியை மக்கள் பதிவு செய்யும் வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வை வெற்றி பெற வைக்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்து முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News