செய்திகள்
தீர்ப்பு

ரெயிலில் 75 வயது பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 2 ஆண்டு சிறை

Published On 2019-10-01 10:53 GMT   |   Update On 2019-10-01 10:53 GMT
பெங்களூர்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 75 வயது பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

கோவை:

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த 75 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த ஆண்டு மே மாதம் கன்னியாகுமரி செல்வதற்காக பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ஐ லேண்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்தார்.

அப்போது வாலிபர் ஒருவர் சேலத்தில் இருந்து அந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்தார். இதனை அவர் எச்சரித்தார். ஆனால் அந்த வாலிபர் கேட்கவில்லை. தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததால் ஆத்திரமடைந்த பெண் ரெயில் திருப்பூர் வந்ததும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் அந்த வாலிபரை பிடித்து விசாரித்து டிக்கெட் பரிசோதகரிடம் ஒப்படைத்தனர்.

ரெயில் கோவை வந்ததும் டிக்கெட் பரிசோதகர் அந்த வாலிபரை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் கோவை சுப்பிரமணியம் பாளையத்தை சேர்ந்த ஸ்ரீகணேஷ்(35) என்பதும், தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் இவர் அதே ரெயிலில் மற்றொரு பெண்ணிடமும் தொந்தரவில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் ஸ்ரீ கணேஷ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஜூடிசியல் மாஜிஸ்திரேட்-6 வது கோர்ட்டில் ரெயில்வே போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீது விசாரணை நடந்தது. இந்த வழக்கில் அரசு வக்கீல் தங்கராஜ் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி கண்ணன் வாலிபர் ஸ்ரீகணேசுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

Similar News