செய்திகள்
குற்றால அருவி

குற்றாலம் பகுதியில் பலத்த மழை - மெயினருவி, ஐந்தருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு

Published On 2019-08-08 05:37 GMT   |   Update On 2019-08-08 05:37 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக குற்றாலத்தில் 2-வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
தென்காசி:

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதும் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கும். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் குற்றாலத்தில் சீசன் நிலவும். அப்போது அங்குள்ள மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

மேலும் சீசன் காலத்தில் குற்றாலம் பகுதியில் சாரல் மழையுடன் குளிர்ந்த காற்றும் வீசும் என்பதால் குளுகுளு தட்பவெப்பநிலை நிலவும். அருவிகளில் குளிக்கவும், குளுகுளு சீசனை அனுபவிக்கவும் சீசன் காலத்தில் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இதனால் சீசன் நிலவும் 3 மாதமும் குற்றாலம் களை கட்டும். இந்த ஆண்டு ஜூன் மாதம் 2-வது வாரத்திலேயே சீசன் தொடங்கியது. சில நாட்கள் மட்டும் அருவிகளில் தண்ணீர் விழுந்தது. பின்னர் மெயினருவி மற்றும் ஐந்தருவி யில் பாறையை ஒட்டியவாறு குறைந்த அளவே தண்ணீர் விழுந்தது. பழைய குற்றால அருவியில் நூல் போன்றே தண்ணீர் விழுந்தது.

கடந்த 2 மாதத்தில் குற்றால அருவிகளில் அவ்வப்போது ஒருசில நாட்கள் மட்டுமே தண்ணீர் நன்றாக விழுந்தது. மற்ற நாட்களில் குறைவாகவே விழுந்து வந்தது. இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகவே காணப்பட்டது. அவர்கள் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் நீண்ட வரிசையில் காத்து நின்று குளித்து சென்றனர்.

இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. குற்றாலம் மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று காலை மெயினருவியில் ஆர்ச் மீதும், ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து விடாமல் மழை பெய்ததால் குற்றால அருவிகளில் நேற்று மாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து இரவிலும் மழை விடாமல் பெய்தது. இன்று காலையும் மழை நீடித்தது. இதனால் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் 2-வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. ஆகவே அந்த அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.

நேற்றே அருவிகளில் தண்ணீர் நன்கு கொட்டியதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்தனர். ஆனால் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

குற்றாலம் மலை மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதியில் விடாமல் மழை பெய்து வருவதால் அருவிகளில் மேலும் தண்ணீர் அதிகரிக்கும் என்பதால் அருவி பகுதிக்கு யாரும் செல்லாத வகையில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News