search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Courtallam"

    • ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    • ஐந்தருவி, பழைய குற்றாலம் அருளிலும் சீராக தண்ணீர் விழுந்து வருவதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா தளமாக விளங்கிவரும் குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டுவது வழக்கம்.

    அப்போது அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதும். ஆனால் இந்த ஆண்டு போதிய அளவு மழை இல்லாத காரணத்தினால் முழுமையான சீசன் இல்லாமல் போனது.

    அவ்வப்போது அருவிகள் வறட்சி அடையும் நிலையும் ஏற்பட்டது. கடந்த மாதமும் கோடையை போல கடுமையான வெயில் சுட்டெரித்ததால் பொது மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.

    இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 4 நாட்களாக இரவு-பகல் என பெய்து வரும் சாரல் மழையினால் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து உள்ளது. இதனால் குற்றாலத்தில் மீண்டும் 'குளுகுளு சீசன்' தொடங்கி உள்ளது.

    குற்றாலம் மெயின் அருவியில் இன்று காலையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மேலும் ஐந்தருவி,பழைய குற்றாலம் அருளிலும் சீராக தண்ணீர் விழுந்து வருவதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    தென்காசி மாவட்டத்தில் திரவிய நகர், ஆவுடையானூர்,குற்றாலம், கடை யம் பகுதிகளில் காலை முதல் மிதமான சாரல் மழை பெய்து வருவதுடன் ரம்யமான சூழ்நிலையும் நிலவி வருவதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் சாரல் மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    • வெளியூர்களில் இருந்து குடும்பமாக வாகன மூலம் வருகிறோம். ஆனால் இரவில் தங்குவதற்கு போதிய விடுதிகள் இல்லை.

    தென்காசி:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக குற்றாலம் அருவிகள் உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படும் பல்வேறு மூலிகை செடிகள், மரங்கள் நிறைந்த வனப்பகுதியின் நடுவே வந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளான குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி மற்றும் புலி அருவி ஆகிய அருவிகளில் குளித்தாலே தனி உற்சாகம் தான் எனவும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்கும் நீர்வீழ்ச்சிகளாக கருதப்பட்டு வருகிறது.

    இதனால் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை நேரத்தில் இங்கு சீசன் களைகட்டும். குற்றால அருவிகளில் குளிப்பதற்காக உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், அண்டை மாநிலங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகம் படையெடுத்து வருவார்கள்.

    தற்பொழுது தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் சாரல் மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் விடுமுறை நாளான நேற்றும், இன்றும் அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் தங்களின் குழந்தைகளுடன் குடும்பமாக வந்து ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.

    இன்று காலை ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது. அவர்களை போலீசார் வரிசையில் நின்று பாதுகாப்புடன் குளித்து செல்ல அறிவுறுத்தினர். மேலும் வாகன நிறுத்தும் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடிகளும் ஏற்பட்டது. வாகன நெருக்கடி மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கூடுதல் போலீசார் அருவி பகுதிகளில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

    அருவி பகுதிகளை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் தயார் செய்யப்படும் உணவுப் பொருட்களை சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி உண்டு மகிழ்வதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    குற்றாலத்தில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் கூறுகையில், சீசன் காலங்களில் வந்து குளிப்பதற்காக நாங்கள் வெளியூர்களில் இருந்து குடும்பமாக வாகன மூலம் வருகிறோம். ஆனால் இரவில் தங்குவதற்கு போதிய விடுதிகள் இல்லை. கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது. விடுமுறை நாட்களில் வரும் பொழுது அரசு விடுதிகள் மட்டுமின்றி தனியார் விடுதிகளும் நிரம்பி வழிவதால் தங்கும் அறைகளை தேடி சுற்றுலா பயணிகள் அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலாத்துறை மற்றும் தமிழக அரசின் சார்பில் குறைந்த விலையில் கூடுதல் தங்கும் விடுதிகளை சுற்றுலா பயணிகளுக்கு அமைத்து தர நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்றனர்.

    • உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், அண்டை மாநிலம் என பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் முகாமிடுவார்கள்.
    • மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றாலத்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் சீசன்களை கட்டும்.

    அப்போது குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், அண்டை மாநிலம் என பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் முகாமிடுவார்கள்.

    இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் இன்னும் பொழியாததால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் உட்பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் சாரல் மலை காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிக்கு மட்டும் தண்ணீர் வரத்து தற்போது சற்று அதிகரித்து காணப்படுகிறது. இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.

    அருவி பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்பட்டது. ஐந்தருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டதால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அருவியில் குளிக்க வந்த பயணிகள் அனைவரையும் வரிசையில் நின்று குளித்து செல்ல அறிவுறுத்தினர்.

    • செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 3 மணி அளவில் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது.
    • நேற்று மாலையில் பெய்த சாரல் மழையினால் குற்றாலம் ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.

    தென்காசி:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யும் காலங்களில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.

    அதாவது ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து தொடங்கி சீசன் களைகட்டும். இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கிவிட்ட நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் மிதமான சாரல் மழை பொழிய தொடங்கியது.

    செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 3 மணி அளவில் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது. அங்கு இதமான குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    நேற்று மாலையில் பெய்த சாரல் மழையினால் குற்றாலம் ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. வார விடுமுறை நாள் என்பதால் அதில் தற்போது சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ தொடங்கியுள்ளனர். மெயின் அருவி முழுவதும் பாறையாக காட்சியளித்த நிலையில் அதில் சற்று தண்ணீர் வழிய தொடங்கி உள்ளதால் எப்பொழுது தண்ணீர் அதிகரிக்கும் ஆனந்த குளியல் போடலாம் என சுற்றுலா பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
    • நவதிருப்பதி நவகைலாயங்கள் கோவில்களுக்கும் சுற்றுலா வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லையில் கொக்கிரகுளம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட தமிழ்நாடு ஓட்டலை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தமிழ்நாடு முழுவதும் 28 ஓட்டல்களை நடத்தி வருகிறது. நெல்லை நெல்லையப்பர் கோவில், பாபநாசம் கோவில், உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில், கிருஷ்ணாபுரம் கோவில், திருக்குறுங்குடி கோவில், உவரி கப்பல் மாதா கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருவதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

    நவதிருப்பதி நவகைலாயங்கள் கோவில்களுக்கும் சுற்றுலா வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து அங்கு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குற்றாலம் சீசனை நம்பி குற்றாலம், காசிமேஜர்புரம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரம் வியாபாரிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.
    • அருவிக்கரைகள் வெறிச்சோடி கிடக்கிறது. அருவிகளில் வெறும் பாறைகள் மட்டுமே காட்சியளிக்கின்றன.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். மேலும் குளிர்ந்த காற்று வீசும்.

    கேரள மாநிலம் மூணாறு போன்று இங்கு குளுகுளு சீசன் நிலவும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி மற்றும் குளிக்க அனுமதி இல்லாத செண்பகாதேவி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும்.

    இந்த அருவிகளில் குளித்து சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குற்றாலம் வந்து செல்வார்கள். இங்குள்ள அருவிகளின் தண்ணீர் மூலிகை குணம் நிறைந்தது. இதனால் எவ்வளவு நேரம் அருவியில் குளித்தாலும் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

    எத்தனையோ சுற்றுலா தலங்கள் இருந்தாலும் சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் வந்து குளிக்கும் ஒரே இடமாக குற்றாலம் திகழ்கிறது. இந்த குற்றாலம் சீசனை நம்பி குற்றாலம், காசிமேஜர்புரம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரம் வியாபாரிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இதே போல் தங்கும் விடுதி உரிமையாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் மூலமாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கும். ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் சீசன் அறிகுறிகள் தொடங்கும்.

    தொடர்ந்து கேரளா மாநிலத்தில் மழை பெய்ய தொடங்கியதும் குற்றாலத்திலும் மழை பெய்ய தொடங்கும். இதனால் தென்காசி மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை சீசனுக்கான அறிகுறிகள் தென்படவில்லை. அருவிக்கரைகள் வெறிச்சோடி கிடக்கிறது. அருவிகளில் வெறும் பாறைகள் மட்டுமே காட்சியளிக்கின்றன.

    ஆனாலும் சீசன் இந்த மாதத்தில் தொடங்கிவிடும் என்ற நம்பிக்கையில் அருவிக்கரைகளில் உள்ள கடைகளை சீரமைக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சீசன் காலத்தில் குற்றாலத்தில் மட்டும் தினமும் ரூ. 20 லட்சம் வரை பணப்புழக்கம் இருக்கும். இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமல்லாது குற்றாலம் அருவியில் நீர்வரத்தை பொறுத்தே தென்காசி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து இருக்கும். அதனை நம்பியும் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் குற்றாலம் சீசன் எப்போது தொடங்கும் என்று எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

    • தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம்.
    • ஊராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடைகள் ஏலம் விடப்பட்டு வியாபாரிகள் கடைகளை அமைப்பதற்கான பணிகளை தொடங்குவர்.

    தென்காசி:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களும் சீசன் காலமாக இருக்கும்.

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமாக இருக்கும்போது அதனை ஒட்டிய பகுதி தென்காசி மாவட்டம் என்பதால் அங்கும் 3 மாதங்களும் சாரல் மழை பொழியும். இதனால் குற்றால அருவிகள் அனைத்திலும் தண்ணீர் கொட்ட தொடங்கும்.

    சுற்றுலா பயணிகள் அனைவரையும் சுண்டி இழுக்கும் வண்ணம் அருவிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் என்பதால் வியாபாரிகள் பலர் அருவி பகுதிகளை சுற்றிலும் அரசு அனுமதியுடன் தற்காலிக கடைகளை அமைத்து வியாபாரங்களை மேற்கொள்வர்.

    ஒவ்வொரு ஆண்டும் சீசன் தொடங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடைகள் ஏலம் விடப்பட்டு வியாபாரிகள் கடைகளை அமைப்பதற்கான பணிகளை தொடங்குவர். தென்காசி மாவட்டத்தில் தற்போது கோடை காலம் என்பதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் இன்றி வறட்சியாக காணப்படுகிறது.

    கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து குற்றால சீசன் தொடங்குவதற்கு முன்பாக குளிர்ந்த காற்று வீசத் தொடங்கும் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதால் சீசன் தொடங்க வாய்ப்புள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையமும் வருகிற 4-ந்தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளதால் குற்றாலம் சீசனும் இன்னும் ஒரு சில தினங்களில் சாரல் மழையுடன் தொடங்கும் எனும் எதிர்பார்ப்பில் வியாபாரிகள் அனைவரும் தற்காலிக கடைகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டை போன்று குற்றால சாரல் திருவிழா இந்த ஆண்டும் மிகப் பிரமாண்டமாக அரசு சார்பில் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் தென்காசி மாவட்ட மக்க ளிடையே ஏற்பட்டுள்ளது.

    • அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து இன்று அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • தமிழக சுற்றுலா பயணிகளும் விடுமுறை தினம் என்பதால் அதிகளவில் குற்றால அருவிகளில் குளிக்க குவிந்து வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தின் பிரதான அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்டவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 4 நாட்களுக்கு மேலாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நேற்றும், இன்றும் விடுமுறை தினம் என்பதாலும், கேரளாவில் ஓணம் பண்டிகை விடுமுறை என்பதாலும் அங்கிருந்து குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக கேரள சுற்றுலா பயணிகள் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர்.

    தற்போது அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து இன்று அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கேரளா மட்டுமின்றி தமிழக சுற்றுலா பயணிகளும் விடுமுறை தினம் என்பதால் அதிகளவில் குற்றால அருவிகளில் குளிக்க குவிந்து வருகின்றனர்.

    இன்று காலையில் பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பழைய குற்றாலம் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளிய லிட்டு மகிழ்ந்தனர்.

    • குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும்.
    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இடையிடையே இதமான வெயில் அடிக்கும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும்.

    இந்த சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவார்கள். தற்போது சீசன் காலம் முடிந்து விட்டது. சாரல் மழை பெய்யவில்லை.

    ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. சுற்றுலா பயணிகள் இன்று அருவிகளில் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    • குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் கொட்டியது.
    • ஆலங்குளம், செங்கோட்டை, சிவகிரி, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அணை பகுதியில் லேசான மழை பெய்கிறது. நெல்லையில் நேற்று இரவு முதல் காலை வரை விட்டுவிட்டு லேசான சாரல் பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நேற்று காலை சிறிது நேரம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று இரவு முதல் காலை வரையிலும் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் கொட்டியது. மேலும் ஐந்தருவியில் அனைத்து கிளைகளும் ஒன்றாக தோன்றியபடி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் நேற்று இரவு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இன்று காலையிலும் 2 அருவிகளிலும் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டி வந்ததால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் குளிக்க முடியாமல் அவர்கள் அருவிக்கரைகளில் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.

    அதே நேரத்தில் பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவிகளில் கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். இன்று காலையில் இருந்தே அருவி பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது.

    ஆலங்குளம், செங்கோட்டை, சிவகிரி, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. சிவகிரியில் அதிகபட்சமாக 27 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதேபோல் தென்காசியில் 19 மில்லிமீட்டரும், ஆய்குடியில் 12 மில்லிமீட்டரும் மழை கொட்டியது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை அடவிநயினார் தனது முழு கொள்ளளவான 132 அடியை எட்டி நிற்கிறது. குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. ராமநதியில் 79 அடியும், கடனா அணையில் 77 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    • குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி ஆகிய 2 அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • கடந்த 9 நாட்களில் பாபநாசம் அணை நீர்மட்டம் சுமார் 41 அடி வரை உயர்ந்துள்ளது.

    தென்காசி:

    கேரளாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 9 நாட்களில் பாபநாசம் அணை நீர்மட்டம் சுமார் 41 அடி வரை உயர்ந்துள்ளது.

    கடந்த 3-ந்தேதி பாபநாசம் அணை நீர்மட்டம் 75 அடியாக இருந்த நிலையில் இன்று 104.60 அடியை எட்டி உள்ளது. இதேபோல் 3-ந்தேதி சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டிய நிலையில் இன்று அதில் 121.95 அடி நீர் இருப்பு உள்ளது.

    இந்த அணைகளுக்கு வினாடிக்கு 2730 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 1004 கனஅடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்சமாக 35 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 24 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி, கடையநல்லூர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இன்று காலை வரை கருப்பாநதி பகுதியில் 27 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 22 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. இதேபோல் கடனாவில் 20 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர்மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்த வண்ணம் உள்ளது.

    கடனா, ராமநதி அணைகள் முழு கொள்ளளவை எட்டினாலும் அணை பாதுகாப்பு கருதி 2 அடி குறைவாகவே தேக்கி வைக்கப்பட்டு உள்ளது.

    அணைக்கு வரும் நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.அடவிநயினார் அணை நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்ந்து 125 அடியாகவும், கருப்பாநதி அணையில் 64.96 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி ஆகிய 2 அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவியில் தடை விதிக்கப்படவில்லை. இதனால் அந்த அருவிகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    மெயினருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி விழுகிறது. அருவியின் மேல் பகுதியில் கனமழையால் மரத்தடிகள், கட்டைகள், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அடித்து வரப்படுகின்றன. அவற்றை அருவிக்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் தென்காசி மாவட்டத்தில் சாரல் மழை பெய்யாததால் அருவிகள் வறண்டுள்ளது.
    தென்காசி:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோடை மழை அதிகமாக பெய்தது. இதனால் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அணைகளில் நீர் வரத்து அதிகரித்தது.

    மாவட்டங்களில் உள்ள குளங்கள், குட்டைகளிலும் நீர் இருப்பு அதிகரித்து காணப்படுகிறது. வழக்கமாக மே மாதத்தில் குளங்கள் வறண்டுவிடும். ஒருசில அணைகளும் கூட கோடை வெப்பத்தால் வறண்டு போகும்.

    ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வழக்கத்தைவிட அதிகமாக பெய்த கோடை மழையால் நீர் இருப்பு அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையில் 70 அடிக்கு மேலாக தண்ணீர் இருப்பதால் நேற்று முதல் 600 கனஅடி நீர் கார் சாகுபடிக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் விவசாய பணிகளும் தொடங்கி உள்ளது.

    தென்காசி மாவட்டத்திலும் அணைகளில் ஓரளவு நீர் இருப்பு உள்ளது. அதே நேரத்தில் கிணறுகள், குளங்களில் நீர் உள்ளதால் விவசாயிகள் நெல் விதை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள செங்கோட்டை, பண்பொழி, தென்காசி, கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பல இடங்களில் விவசாயம் தொடங்கி உள்ளது. குற்றாலம் அருவிகளில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான வெயிலின் காரணமாக அனைத்து அருவிகளும் வறண்டுவிடும்.

    ஆனால் இந்த ஆண்டு அவ்வப்போது பெய்த கோடை மழையால் அருவிகளில் சீசன் காலத்தில் இருப்பது போல தண்ணீர் கொட்டியது. சுற்றுலா பயணிகளும் குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை குறைந்து கடுமையான வெயில் வாட்டி வதைக்க தொடங்கி உள்ளது. இதனால் அருவிகளில் நீர்வரத்து குறைந்து வருகிறது.

    தற்போது குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வெகுவாக குறைந்தது. இதனால் குறைவான தண்ணீரில் வாளிகளில் தண்ணீரை பிடித்து குளித்தனர். இன்று அருவிகள் முழுவதுமாக வறண்டு போய்விட்டது.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் தென்காசி மாவட்டத்தில் சாரல் மழை பெய்யாததால் அருவிகள் வறண்டுள்ளது. எனினும் இந்த மாத இறுதியில் மழை பெய்து அருவிகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்படும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    ×