செய்திகள்
செஞ்சி பஸ் நிலையத்தில் குளம் போல் தேங்கிய மழை நீர்.

செஞ்சி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை- வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

Published On 2019-07-20 05:27 GMT   |   Update On 2019-07-20 05:27 GMT
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
செஞ்சி:

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு 8 மணியளவில் செஞ்சி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது சூறாவளிக்காற்றும் வீசியது. சுமார் 1 மணிநேரம் மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

செஞ்சி பஸ் நிலையத்தில் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதையடுத்து பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் தண்ணீர் புகுந்தது.

மோட்டார் சைக்கிள் வாகனங்கள் ஊர்ந்து சென்றது. மழையினால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதியில் குளம் போல் மழைநீர் தேங்கி நின்றது. இதில் போக்குவரத்து கடும் பாதிப்பு அடைந்தது. பஸ் நிலையத்தில் குளம் போல் தேங்கிய மழைநீரை பேரூராட்சி பணியாளர்கள் மின்மோட்டார் மூலம் வெளியேற்றினர்.

மேலும் பலத்த மழை பெய்ததால் செஞ்சி பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் தவித்து வந்தனர். மழை பெய்து முடித்த சில மணிகளுக்கு பின் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் வடிந்தது.

செஞ்சியில் 75 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று பெய்தமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை உருவானது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News