செய்திகள்
குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியல் செய்த மக்கள்

செஞ்சி அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2019-07-06 05:02 GMT   |   Update On 2019-07-06 05:02 GMT
செஞ்சி அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது ஆலம்பூண்டி. இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு அங்கு நீர்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக செஞ்சி பகுதியில் கடும் வெயில் கொளுத்துவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது.

மேலும் இப்பகுதி மக்களுக்கு வாரத்தில் 1 நாள் மட்டும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. பெரும்பாலான வீடுகளில் மின்மோட்டார்கள் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான வீடுகளுக்கு குடிநீர்கிடைக்கவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதியடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டனர். வீடுகளில் மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதை தடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதைத்தொடர்ந்து இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஒன்று திரண்டனர். பின்பு அவர்கள் திருவண்ணாமலை- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெண்கள் காலிகுடங்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்டவரிசையில் அணிவகுத்து நின்றன.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் கலைந்து செல்வோம் என்றனர்.

இதனைத்தொடர்ந்து செஞ்சி வட்டார வளர்ச்சி அதிகாரி ராதாகிருஷ்ணன் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News