செய்திகள்
ராமதாஸ், தினகரன்

உச்சநீதிமன்ற தீர்ப்பு நகலை வெளியிடும் மாநில மொழி பட்டியலில் தமிழை சேர்க்க வேண்டும்: ராமதாஸ்-தினகரன் வலியுறுத்தல்

Published On 2019-07-03 10:07 GMT   |   Update On 2019-07-03 10:07 GMT
உச்சநீதிமன்றம் தீர்ப்பு நகல்களை வெளியிடும் மாநில மொழிகளின் பட்டியலில் தமிழையும் அவசியம் சேர்க்க வேண்டும் என்று ராமதாஸ் மற்றும் தினகரன் வலியுறுத்தியுள்ளார்கள்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் வெளியிடுவது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் 5 மாநில மொழிகளில் வெளியிடப்படும் தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியிடப்படாது என்பது ஏமாற்றமளிக்கிறது.

உலகின் மூத்த மொழியான தமிழிலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளியிடப்பட வேண்டும். தேவைப்பட்டால் அதற்கான உதவிகளையும், கட்டமைப்புகளையும் தமிழக அரசிடமிருந்து உச்சநீதிமன்றம் கேட்டுப் பெறலாம்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல்களை வெளியிடும் மாநில மொழிகளின் பட்டியலில் தமிழ்மொழி இடம் பெறாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. உலகம் முழுக்க கொண்டாடப்படும் மொழியாகவும், செம்மொழி அங்கீகாரம் பெற்றிருக்கும் மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது.

அலுவல் ரீதியாக பயன்படுத்துவதற்கான அத்தனை கட்டமைப்புகளும் தமிழ் மொழிக்கு உண்டு. ஆகவே, உச்சநீதிமன்றம் தீர்ப்பு நகல்களை வெளியிடும் மாநில மொழிகளின் பட்டியலில் தமிழையும் அவசியம் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News