செய்திகள்

மதுரை அருகே கோஷ்டி மோதலில் மோட்டார் சைக்கிளை மறித்து வாலிபர் கொலை

Published On 2019-06-18 05:07 GMT   |   Update On 2019-06-18 05:07 GMT
மதுரை அருகே கோஷ்டி மோதலில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

மதுரை:

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது கொடுக்கான்பட்டி. அங்குள்ள முத்துப்பிடாரி அம்மன் கோவிலில் கடந்த 2 நாட்களாக திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு நாடகம் நடந்தது. இதனை பார்ப்பதற்காக பக்கத்து ஊரான அ.கோவில்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராம்பு (வயது 23), அவரது நண்பர்கள் தங்கையா (30), சுபாஷ் (19), திவாகர் (25) ஆகிறோர் சென்றனர்.

நாடகம் முடிந்ததும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். வழியில் மற்றொரு சமுதாயத்தினர் வாழும் பகுதியில் வந்தபோது ஒரு கும்பல் அவர்களை வழிமறித்தது. இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் எங்கள் பகுதியில் ஏன் வந்தீர்கள் என்று தகராறு செய்தனர்.

மோட்டார் சைக்கிளின் சாவியையும் பறித்தனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட கும்பல் ராம்பு உள்ளிட்ட 4 பேரையும் கடுமையாக தாக்கியது. அதில் படுகாயம் அடைந்த ராம்பு கீழே விழுந்தபோது சிலர் கல்லை தூக்கி ராம்பு மீது போட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராம்பு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று சிகிச்சை பலனின்றி ராம்பு இறந்தார். மற்ற 3 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை நடந்த இடத்தை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

தாக்குதல் நடத்தியதாக கொடுக்காம்பட்டி காலனியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (19), கல்யாணசுந்தரம் (27), நாச்சியப்பன் (37), தர்மலிங்கம் (42), அன்பரசு (28), பாலா (17), சஞ்சீவி (23), செல்வராஜ் (45), திருக்குமரன் (29), தங்கசாமி (26), பிரதீப்குமார் (21), பிரசாந்த் (18), சந்தாணபிரபு (18), திலீப்குமார் (37) ஆகிய 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கோஷ்டி மோதல் இரு சமுதாயத்தினர் இடையே நடந்துள்ளதால் மேலும் அசம்பாவிதத்தை தடுக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News