செய்திகள்

விளைநிலங்களில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - 11 விவசாயிகள் கைது

Published On 2019-06-15 06:11 GMT   |   Update On 2019-06-15 09:48 GMT
விளைநிலங்களில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 11 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

சூலூர்:

சத்திஸ்கர் மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க மத்திய அரசின் பவர் கிரீட் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் புகழூர் முதல் அரசூர் வரை 80 கிலோ மீட்டர் தூரத்திற்கு விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கப்பட உள்ளது.

இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்ப்பை மீறி விவசாய நிலங்கள் வழியாக மின் கோபுரம் அமைக்கும் பணியை பவர் கிரீட் நிறுவனம் நடத்தி வருகிறது.

கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி, செம்மாண்டம் பாளையம், வாய்க்காபாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த 11-ந் தேதி பவர் கிரீட் நிறுவன அதிகாரிகள் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணிக்கு நில அளவீடு செய்ய வந்தனர்.

அவர்களை செம்மாண்டம் பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தினார்கள். மேலும் ஏற்கனவே அங்கு அமைக்கப்பட்டு இருந்த மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) காலையும் செம்மாண்டம் பாளையம் பகுதிக்கு பவர் கிரீட் நிறுவன அதிகாரிகள் நில அளவீடு பணிக்கு வந்தனர். அவர்களை விவசாயிகள் முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தினார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சோமனூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News