செய்திகள்

ஒரு ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்வார்கள் - வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு

Published On 2019-03-09 16:50 GMT   |   Update On 2019-03-09 16:50 GMT
தி.மு.க. கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் அணியினர் ஒரு ஓட்டுக்கு ரூ. ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செலவு செய்வார்கள் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். #Vaiko
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் ம.தி.மு.க. நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ரூ. 55 லட்சமும், நாமக்கல் மாவட்டம் சார்பில் ரூ. 10 லட்சமும் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவிடம் வழங்கப்பட்டது.பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது-

பாராளுமன்றம் மற்றும் 21 சட்ட சபை தொகுதிகளுக்கான தேர்தலில் தி.மு.க. கூட்டணி நிச்சயம் மகத்தான வெற்றி பெறும். கடந்த 2004-ம் ஆண்டு தி.மு.க. அணி 40 எம்.பி. தொகுதிகளிலும் வெற்றி பெற்றதோ அது போல் மீண்டும் வரலாறு திரும்ப உள்ளது.

தற்போது ஆட்சியில் உள்ள மத்திய அரசானது அதிகாரத்தை கையில் வைத்து கொள்ள எத்தகைய தவறான முறைகளையும் கையாள வாய்ப்பு உள்ளது.

போலீஸ் வாகனம், 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவற்றில் பணம் கொண்டு செல்ல அதிகார வர்க்கம் திட்டமிட்டுள்ளது.

தி.மு.க. கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் அணியினர் ஒரு ஓட்டுக்கு ரூ. ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செலவு செய்வார்கள்.

நீட் தேர்வு விவகாரம், உயர் மின்னழுத்த கோபுரம், முல்லை பெரியாறு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற விவகாரங்களில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துள்ளது.

முதன்மை மாநிலமாக செழித்து வளர்ந்துள்ள தமிழகத்தை அழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ராணுவத்தினரை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளோம். அபிநந்தனை நினைத்து பெருமைப்படுகிறோம்.ஆனால் ரபேல் விவகாரத்தில் பிரதமர் மீதான சந்தேகம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில் கவர்னரும், தமிழக அரசும் இதுவரை முறையான பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

பாராளுமன்ற தேர்தலில் 130 இடங்களை மட்டுமே பாரதிய ஜனதா பெறும். மாநில அரசுகளின் ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.கருணாநிதியை மருத்துவமனைக்கு சென்று பார்க்க விரும்பிய விஜயகாந்தை மு.க.ஸ்டாலின் பார்க்க அனுமதிக்கவில்லை என பிரேமலதா கூறியுள்ளார்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மனிதாபிமானம் உள்ளவர். அவர் அவ்வாறு நடந்து இருக்க மாட்டார்.

அவர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.பத்திரிகையாளர்களை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா ஒருமையில் பேசியிருப்பது தவறானது. இவ்வாறு பேசுவது முறையல்ல. இதனை அவர் தவிர்க்க வேண்டும்.

கட்சி நிதி அளிக்கும் நிகழ்ச்சியில் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாநகர செயலாளர் சிவபாலன், மாவட்ட துணை செயலாளர் முத்து ரத்தினம், பல்லடம் நகர செயலாளர பாலு, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், பொங்கலூர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். #Vaiko
Tags:    

Similar News