செய்திகள்

திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து

Published On 2019-02-26 04:16 GMT   |   Update On 2019-02-26 04:16 GMT
திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள எந்திரம், துணிகள் எரிந்து சேதம் அடைந்தது.

திருப்பூர்:

திருப்பூர் நடராஜ் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் அதுல் ஆசாத் (56). இவர் 15 வேலம்பாளையம் ரிங் ரோட்டில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

நேற்று இரவு வேலை முடிந்து ஊழியர்கள் பனியன் நிறுவனத்தை பூட்டி சென்றனர்.

அதிகாலை 4.30 மணியளவில் பனியன் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பரவியது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பனியன் நிறுவன உரிமையாளர் அதுல் அசாத் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இரு தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் உடனடியாக அணைக்க முடியவில்லை. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தான் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.

இந்த தீ விபத்தில் எந்திரங்கள், 20 தையல் மிஷின்கள், பல லட்சம் மதிப்புள்ள துணிகள், டீ சர்ட்டுகள் எரிந்து சேதம் அடைந்தது. இதனை பார்த்து பனியன் நிறுவன உரிமையாளர் கதறி அழுதார். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News