செய்திகள்

பொங்கல் கொண்டாட சொந்தஊர் பயணம்- சென்னையில் இருந்து இன்று 3,582 பஸ்கள் இயக்கப்படுகிறது

Published On 2019-01-14 09:51 GMT   |   Update On 2019-01-14 09:51 GMT
பொங்கல் பண்டிகை நாளை என்பதால் இன்று வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வழக்கமான 2275 பஸ்களுடன் 1307 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. #Pongal2019 #TNBuses
சென்னை:

பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட வசதியாக அரசு சிறப்பு பஸ்களை மட்டுமின்றி இன்று (14-ந் தேதி) அரசு விடுமுறையாகவும் அறிவித்தது.

இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 6 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைத்துள்ளது.

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் தினமும் இயக்கப்பட்டன. இன்று 4-வது நாளாக சிறப்பு பஸ்கள் சென்னையில் 5 இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது. நேற்று வரை 5 லட்சம் பயணிகள் அரசு பஸ்களில் பயணம் செய்துள்ளனர்.

பொங்கல் நாளை என்பதால் இன்று வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று வழக்கமான 2275 பஸ்களுடன் 1307 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தை பொறுத்து கூடுதலாகவும் பஸ்களை இயக்க தயாராக வைத்துள்ளனர்.

முன்பதிவு செய்த பயணிகளை விட முன்பதிவு செய்யாமல் வெளியூர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை உயர்வாக உள்ளது.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் புறப்பட்டு செல்வதால் பயணிகள் கூட்டத்தால் பஸ் நிலையம் நிரம்பி வழிந்தது. இது தவிர சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், வந்தவாசி போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றன.

போக்குவரத்து கழக அதிகாரிகள் பொதுமக்களின் தேவை அறிந்து கூட்டத்தை பொறுத்து பஸ்களை இயக்கி வருகிறார்கள்.

தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திண்டிவனம் பகுதிக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

பொதுமக்கள் பஸ் நிலையங்களுக்கு செல்ல மாநகர இணைப்பு பேருந்துகள் அதிகளவு விடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மாநகர சிறப்பு பஸ்கள் பஸ் நிலையங்களுக்கு சென்று வருகின்றன.

பஸ் நிலையங்களை போல சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களிலும் கூட்டம் இன்று அலைமோதியது. எழும்பூரில் இருந்து பகல் நேரத்தில் சென்ற ரெயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

குருவாயூர் எக்ஸ்பிரஸ், கம்பன் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி எக்ஸ்பிரஸ், வைகை, பல்லவன் உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் மக்கள் இடம் பிடிக்க நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

சென்ட்ரலில் இருந்து சேலம், திருப்பூர், கோவை மற்றும் திருவனந்தபுரம் செல்லும் ரெயில்களிலும் இடங்கள் இல்லாமல் மக்கள் நின்றவாறு பயணம் செய்தனர். #Pongal2019 #TNBuses
Tags:    

Similar News