செய்திகள்

தேர்தலில் நின்று வெற்றிபெற்றால் அரசியலை விட்டே விலக தயார்- பழனிசாமிக்கு செந்தில்பாலாஜி சவால்

Published On 2018-12-28 04:35 GMT   |   Update On 2018-12-28 04:35 GMT
முதல்வர் பதவியை ராஜினாமா செய்து தேர்தலில் நின்று வெற்றிபெற்றால் அரசியலை விட்டே விலக தயார் என்று எடப்பாடி பழனிசாமிக்கு செந்தில்பாலாஜி சவால் விடுத்துள்ளார்.
கரூர்:

கரூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் இணையும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:-

கரூர் பாராளுமன்ற தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் தம்பிதுரை பாராளுமன்றத்தை நடத்தக் கூடிய சபாநாயகர் பதவியில் இருக்கிறார். சபையில் பிரதமர் இவரை பார்த்து வணக்கம் செலுத்துவார். அப்படிப்பட்ட பதவியில் இருக்கும் அவர் கரூர் மாவட்ட மக்களுக்கு எந்த வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வரவில்லை.

ஆகவே 2014 பாராளுமன்ற தேர்தல் வெற்றி தான் உங்களுடைய கடைசி வெற்றியாக இருக்கும். வருகிற 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் யாரை வேட்பாளராக அறிவிக்கின்றாரோ? அவரே மக்கள் செல்வாக்குடன் வெற்றி பெறுவார்.

கரூரில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அவர் அறிவிக்கின்ற வேட்பாளர் வெற்றி பெறும் வகையில் நாங்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம். மக்களிடம் அநீதிகளை சொல்லி புதிய ஆட்சி அமைக்க இருக்கிற மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தளபதி அல்ல. தமிழக மக்களின் தளபதி.

துரோகத்தை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். நான் உள்பட 5 அல்லது 6 பேர் ஓட்டு போடவில்லை எனில் அவர் முதல்-அமைச்சர் ஆகியிருக்க முடியுமா? ஓட்டு போடவில்லை என்றால் அவர் வீட்டுக்கு சென்று விவசாய பணியிலும், கிரசர் வியாபாரத்திலும் தான் இறங்கியிருப்பார். ஆனால் இன்று தேசத்துக்காக சாதித்தது போல் பேசுகிறார்.

எடப்பாடி பழனிசாமி வேண்டும் எனில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கலாம். ஆனால் அவரும், நானும் ஒரே நாளில்தான் அமைச்சராக ஆனோம். ஏதோ அவர் எனக்கு வாய்ப்பு கொடுத்தது போல் பேசுகிறார். அவர் முதல் -அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்களை சந்தித்து தேர்தலில் வாக்கு கேட்டு மீண்டும் முதல்-அமைச்சர் ஆனால் நான் அரசியலை விட்டே விலகி கொள்கிறேன். இல்லையெனில் அவர் அரசியலை விட்டு விலக வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்., தங்கமணி, வேலுமணி, தம்பிதுரை இங்கிருக்கும் அமைச்சர் உள்ளிட்டோர் வழக்கிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் உரிமையை மத்திய பா.ஜ.க. அரசிடம் அடகு வைத்து விட்டனர். தமிழக மக்களுக்கு விரோதமான ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்கள். தாந்தோன்றி மலை வெங்கட ரமணசாமி கோவிலின் பாதங்களில் தற்போது நின்று கொண்டு சொல்கிறேன்.

வருகிற 2019 பாராளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தல் வரும். 234 தொகுதிகளிலும் வென்று தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆவார்.

தமிழகத்திலுள்ள 7½ கோடி மக்களின் உணர்வுகளை மதித்து தமிழக உரிமையை மீட்கவும், நல்லாட்சி தரவும் மு.க.ஸ்டாலினால் மட்டுமே முடியும். இனிமேல் கரூர் உள்பட மேற்கு மண்டலம் தலைவர் ஸ்டாலினின் கோட்டையாக திகழும்.

நமக்கு நாமே துணையிருந்தால் வெற்றி ஒன்றும் தூரமில்லை. தொண்டனாய் நாளும் வந்து தோள் கொடுங்கள். கலைஞரின் சொல்லை கொண்டும், ஸ்டாலினின் வில்லை கொண்டும் மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனதை வெல்வோம். தமிழகத்தை அடமானம் வைத்த துரோகிகளின் முகத்திரையை கிழிப்போம்.

தலைவரின் பயணத்திலே வெற்றியை மட்டும் சேர்ப்போம். கரூர் மாவட்டத்தில் 30,425 பேரை உறுப்பினர்களாக தற்போது சேர்த்து தலைவரின் கரத்தை வலுப்படுத்தியதில் பெருமிதம் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். #SenthilBalaji #Edappadipalaniswami
Tags:    

Similar News