செய்திகள்

பாராளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் போராட்டம்- தம்பிதுரை எம்பி பேட்டி

Published On 2018-09-26 10:27 GMT   |   Update On 2018-09-26 10:27 GMT
பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு எதிராக பாராளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் போராடினாலே விலை குறைய வாய்ப்புள்ளது என்று தம்பிதுரை எம்.பி. கூறினார். #thambidurai #parliament #rajivkillers

கரூர்:

கரூர் சேங்கலில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

குற்றச்சாட்டுக்கு உள்ளான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் நிற்க தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை குற்றப் பின்னணி உள்ள அரசியல்வாதிகள் அதிகம் கிடையாது என்பது எனது கருத்து.

பெட்ரோல்- டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாது. முந்தைய காங்கிரசின் தவறான கொள்கையால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. அதே கொள்கையைத்தான் இப்போதைய மத்திய அரசும் கடைபிடிக்கிறது.


தனியார் வசமிருக்கும் விலை நிர்ணய உரிமையை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக பாராளு மன்றத்தில் குரல் கொடுப்போம். இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. போராட்டம் நடத்துவது குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் முடிவு செய்வார்கள். என்னை பொருத்த மட்டில் 50 எம்.பி.க்கள் இருக்கிறோம். பாராளுமன்றத்தில் போராடினாலே விலை குறைய வாய்ப்புள்ளது. அதுவே போதும்.

மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சியின் போது, இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பின்னர், இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டார். தற்போது போருக்கு இந்தியா உதவியதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே இதற்கு காரணமான காங்கிரஸ்-தி.மு.க. கட்சியினர் மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். 

ராஜீவ்காந்தி மாபெரும் தலைவர். அவர் கொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இருப்பினும் குற்றவாளிகள் 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டார்கள். எனவே அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அவரின் வழியில் தற்போதைய அரசும் , குற்றவாளிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #parliament #rajivkillers

Tags:    

Similar News