செய்திகள்

ஆசிரியர்களை நாங்கள் தெய்வமாக நினைக்கின்றோம்- செங்கோட்டையன் பேச்சு

Published On 2018-09-08 11:56 GMT   |   Update On 2018-09-08 11:56 GMT
ஆசிரியர்களை நாங்கள் தெய்வமாக நினைக்கின்றோம் என்று தருமபுரியில் நடந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். #ministersengottaiyan

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், இலக்கியம் பட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் தின விழா, சிறந்த தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா இன்று நடந்தது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் முன்னிலை வகித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் ஆசிரியர் தின விழாவை தொடங்கி வைத்தனர்.

விழாவில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 13 ஆயிரத்து 8 பேருக்கு ஆசிரியர் பணிக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 67 கல்வி அலுவலகங்கள் இருந்தது. இதனால் அலுவலக பணியாளர்களுக்கு பணி சுமை அதிகரித்தது. தற்போது 120 கல்வி அலுவலகங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவாக நடைபெற்று முடியும். இதனால் பணியாளர்களுக்கு பணி சுமை குறையும்.

சிறந்த மாணவர்களை உருவாக்க ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது. சிற்பி சிலையை எப்படி மெல்ல மெல்ல செதுக்குகிறாரோ? அதேபோல் தான் மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். நல்ல திறமை வாய்ந்த மாணவர்களை ஒவ்வொரு ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது. அதனால் ஆசிரியர் பணியை நான் பாராட்டுகிறேன்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் புதிய முறையில் பாடத்திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது. இந்த புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு 9 துணை வேந்தர்கள், 14 கல்வி இயக்குனர்கள், 1,250 ஆசிரியர்கள் ஆகியோர்கள் சுமார் 8 மாதங்களாக இருந்து சிறப்பாக பணியாற்றி பாடத் திட்டத்தை உருவாக்கி உள்ளனர்.

விரைவில் 9, 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் 3 ஆயிரம் வகுப்பறைகளில் ஸ்மார்டு கிளாஸ் இண்டர்நெட் வசதியுடன் தொடங்கப்படும். மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப் படுகிறது. ஆனால் ஆசிரியர் களுக்கென்று மடிக்கணினிகள் வழங்கப்படுவது இல்லை.

அவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களது கோரிக்கைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பி வைத்து ஆசிரியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிரியர் பணியால் தான் ஒரு நாடு வளர முடியும். எனவே அவர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். பொதுவாக ஆசிரியர்களை குருவாக தான் நினைப்பார்கள். ஆனால் நாங்கள் அவர்களை தெய்வமாக நினைக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து அரசு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி வழங்கிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாக செயல்பட்ட 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயங்களை அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி. அன்பழகன் ஆகியோர் வழங்கினர்.

விழாவில் மக்கள் பிரதிநிதிகள், அனைத்துத் துறை அதிகாரிகள், ஆசிரிய, ஆசிரியைகள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக இன்று காலை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் கல்லூரி இணையதள முகவரி மற்றும் சின்ன வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன்,கே.பி. அன்பழகன் மற்றும் தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரி இணையதள முகவரி மற்றும் சின்னத்தை வெளியிட்டனர். பின்னர் பாலக்கோடு தனியார் திருமண மண்டபத்தில் ஆவின் சார்பாக சமச்சீர் தீவனம் திட்டம் துவங்கி வைத்தனர். #ministersengottaiyan

Tags:    

Similar News