செய்திகள்

காங்கிரசுடன் த.மா.கா. இணைப்பா - திருநாவுக்கரசர் பேட்டி

Published On 2018-09-01 16:29 GMT   |   Update On 2018-09-01 16:29 GMT
த.மா.கா.வை காங்கிரசில் இணைப்பது தொடர்பாக அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன்தான் முடிவு செய்ய வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார். #thirunavukkarasar

திருச்சி:

திருச்சியில் இன்று மாநகர், வடக்கு , தெற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாசலம் மன்றத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-

தமிழக காங்கிரசில் எந்த கோஷ்டியும் இல்லை. ஒரே ஒரு கோஷ்டிதான் அது ராகுல்காந்தி கோஷ்டிதான். தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இருப்பதால் தேர்தல் சீட்டுகளை கேட்டு பெறுவதில் பிரச்சினை ஏதும் ஏற்படாது. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தொகுதி பங்கீடு குறித்து சுமூக முறையில் பேசி முடிவு செய்யப்படும்.

திருச்சி தொகுதியில் நான் போட்டியிடுவேனா? என்பது குறித்து தலைவர்தான் முடிவு செய்வார். அது மட்டுமல்ல யார் யாருக்கு எந்த தொகுதி என்பதை ராகுல்காந்திதான் முடிவு செய்வார். அதனை தமிழக காங்கிரஸ் தலைவர் அறிவிக்க முடியாது.

காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. த.மா.கா.வை காங்கிரசில் இணைப்பது தொடர்பாக அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன்தான் முடிவு செய்ய வேண்டும். குட்கா ஊழலில் ஆதாரம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் விஜயபாஸ்கரை பணி நீக்கம் செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar 

Tags:    

Similar News