செய்திகள்
குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற வள்ளியம்மை.

கணவரின் 2-வது திருமணத்தை தடுக்கக்கோரி 3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்

Published On 2018-07-30 07:49 GMT   |   Update On 2018-07-30 07:49 GMT
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கணவரின் 2-வது திருமணத்தை தடுக்கக் கோரி 3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்ப்பு கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக கலெக்டரிடம் கொடுக்க வந்திருந்தனர்.

அப்போது 3 குழந்தைகளுடன் வந்திருந்த பெண் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை எடுத்து குழந்தைகள் மீதும், அவர் மீதும் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். கையில் வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலையும் கைப்பற்றினர்.

பின்னர் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் விழுப்புரம் வி.மருதூர் பகுதியை சேர்ந்த கோபி என்பவரது மனைவி வள்ளியம்மை (வயது 29) என்பதும், இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ள விவரம் தெரிய வந்தது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார். கடந்த மாதம் ஊருக்கு வந்தார். அவருக்கு அவரது தாயும், தந்தையும் சேர்ந்து 2-வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதையறிந்த நான், இனி உயிர் வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணினேன். இந்த நிலையில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு செய்தேன். அதற்காக 3 குழந்தைகளுடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வந்தேன்.

மிகுந்த மனவேதனையில் இருந்த நான் மண்எண்ணையை எனது குழந்தைகள் மீதும் ஊற்றி, நானும் தீக்குளிக்க முயன்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து வள்ளியம்மையை விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Villupuramcollectoroffice

Tags:    

Similar News