செய்திகள்
ஜெயராமன்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உசிலம்பட்டி விவசாயி பலி

Published On 2018-05-24 05:35 GMT   |   Update On 2018-05-24 05:35 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த உசிலம்பட்டி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
உசிலம்பட்டி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் (வயது45) என்பவர் நேற்று 12-வது நபராக இறந்தார். இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஆரியபட்டியை சேர்ந்தவர்.

விவசாயம் செய்து வந்த ஜெயராமன், ஆரம்பத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பில் இருந்துள்ளார். பின்னர் மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினரான அவர், விவசாயிகளின் பிரச்சினை மற்றும் பொது பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வந்தார்.

மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரங்களையும் வழங்கி வந்த ஜெயராமன், ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்க மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகளுடன் சென்றார்.

அங்கு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றபோது போலீசார் துப்பாக்கி சூட்டில் தலையில் காயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜெயராமன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

அவருக்கு பாலம்மாள் என்ற மனைவியும், நந்தினி என்ற மகளும் உள்ளனர். கருமாத்தூரில் உள்ள கல்லூரியில் நந்தினி இந்த ஆண்டுதான் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News