செய்திகள்

அரக்கோணம் அருகே மதுகுடிக்க டம்ளர் கேட்ட வாலிபர் அடித்து கொலை

Published On 2018-05-14 05:16 GMT   |   Update On 2018-05-14 05:16 GMT
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே வாலிபரை அடித்துக் கொன்ற தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம்:

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள உளியம்பாக்கம் காலனியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் தன்ராஜ் என்கிற ராஜ்குமார் (வயது 20). கூலித் தொழிலாளி. நேற்றிரவு இவர் போதையில் இருந்தார். மேலும் குடிப்பதற்காக உளியம்பாக்கம் அருகேயுள்ள கீழாந்தூர் காலனி பகுதிக்கு சென்று மதுபானம் வாங்கி உள்ளார்.

மது குடிப்பதற்காக அங்கு வசிக்கும் லலிதா என்கிற ஜெயலலிதா (60) என்ற மூதாட்டி வீட்டிற்கு சென்று டம்ளர் மற்றும் தண்ணீர் கேட்டுள்ளார். அவர் டம்ளர், குடிநீர் தர மறுத்ததால், ராஜ் குமார் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயலலிதா மற்றும் அவரது மகன் சுதாகர் என்கிற சேட்டு ஆகிய 2 பேரும் உருட்டுக்கட்டையால் ராஜ்குமாரை தாக்கி அடித்து உதைத்தனர். இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமார் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து, அரக்கோணம் தாலுகா போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து ஜெயலலிதா மற்றும் அவரது மகனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதட்டமான சூழல் காணப்படுகிறது. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News