செய்திகள்

மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை தாக்கல் - புதுவை காங்., எம்.எல்.ஏ.க்கள் பீதி

Published On 2018-03-31 08:56 GMT   |   Update On 2018-03-31 08:56 GMT
நியமன எம்.எல்.ஏ.க்கள் அனுமதி மறுப்பு குறித்து மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை தாக்கல் செய்துள்ளதால் புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பீதியில் உள்ளனர்.
புதுச்சேரி:

மத்திய அரசு நேரடியாக நியமனம் செய்த பா.ஜனதாவை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்க சபாநாயகர் மறுத்துவிட்டார்.

இதை எதிர்த்து 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் கோர்ட்டிற்கு சென்றனர். சென்னை ஐகோர்ட் மத்திய அரசு எம்.எல்.ஏ.க்களை நியமனம் செல்லும் என்றும் அவர்களை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

ஆனால் கடந்த 26-ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய கூட்டப்பட்ட சட்டமன்ற கூட்டத்திற்கு நியமன எம்.எல்.ஏ.க்கள் வந்தனர். அவர்களை நுழைவுவாயிலில் சட்டசபை காவலர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

இதையடுத்து நியமன எம்.எல்.ஏ.க்கள் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்து புகார் செய்தனர். நியமன எம்.எல்.ஏ.க்கள் அனுமதி மறுப்பு குறித்து கவர்னர் கிரண்பேடி, புதுவை தலைமை செயலாளர் அஸ்வினிகுமாரிடம் அறிக்கை கேட்டு பெற்றார். இந்த அறிக்கையோடு தனது கருத்தையும் இணைத்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதன்மீது மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது.

மேலும் புதுவை சட்டமன்றத்தை முடக்கவோ அல்லது கலைக்கவோ வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இது புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடையே பெரும் பீதியை உருவாக்கியுள்ளது. தேர்தல் முடிந்து 2 ஆண்டுகள்கூட ஆகாத நிலையில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க தயார் நிலையில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை.

அதோடு கடந்த 2 ஆண்டுகாலமாக நிதி நெருக்கடியால் மக்களை கவரும் வகையில் அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க முடியாத நிலைதான் தற்போது நிலவுகிறது. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என்ன நடக்குமோ? என பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
Tags:    

Similar News