செய்திகள்

விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின் வயர்கள் சவுக்கு கம்பால் மின்கம்பம் அமைத்த விவசாயிகள்

Published On 2018-03-22 07:18 GMT   |   Update On 2018-03-22 07:18 GMT
சாத்தான்குளம் பகுதியில் விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின் வயர்களை விவசாயிகள் சவுக்கு கம்பால் மின்கம்பம் அமைத்துள்ளனர்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் பகுதியில் புத்தன்தருவைகுளம் அருகில் சுமார் 400 ஏக்கர் பரப்பில் பாசன விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விளை நிலங்களுக்கும், பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்கும் மின் கம்பத்திலிருந்து மின் இணைப்பு வயர்கள் செல்கின்றன. இந்த மின் வயர்கள் மின் கம்பத்திலிருந்து மிகவும் தாழ்வாக தொய்வாக செல்கிறது.

இப்படி தாழ்வாக செல்வதால் விவசாய நிலங்களில் வேலை பார்க்கும் விவசாயிகள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். தாழ்வான மின் வயர்கள் அறுந்து விழுந்தால் மின் விபத்து ஏற்படும் சூழ்நிலையுள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தட்டார்மடம் அருகேயுள்ள நடுவக்குறிச்சி உபமின் நிலைய அதிகாரிகளிடம் மின் வயர்களை சரி செய்து தருமாறு பலமுறை முறையிட்டும் எவ்வித பலனுமில்லை.

மின் ஊழியர்கள் பற்றாக் குறையாக இருப்பதாக மின் வாரிய அதிகாரிகள் மழுப்பல் பதிலை சொல்லி வருகின்றனர். தொடர்ந்து முறையிட்டும் பலனில்லாததால் விவசாயிகளே சவுக்கு கம்புகளால் தற்காலிகமாக மின் வயர்களை உயர்த்தி கட்டியுள்ளனர்.

இதுபற்றி அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், தற்காலிகமாகத்தான் மின் வயர்களை உயர்த்தி கட்டியுள்ளோம். மேலும் பலத்த காற்று அடித்தால் சவுக்கு கம்பு சரிந்து மின் வயரினால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலையுள்ளது.

எனவே மின் விபத்தினை தடுத்திட உடன் மின் வாரிய அதிகாரிகள் விவசாய நிலங்களை பார்வையிட்டு மின் வயர்களை உயர்த்தி சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். #tamilnews

Tags:    

Similar News