செய்திகள்

திராவிடர் கழக பொதுக்கூட்டத்தை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் சாலைமறியல்

Published On 2018-03-13 11:35 GMT   |   Update On 2018-03-13 11:35 GMT
திருத்துறைப்பூண்டியில் பா.ஜனதா கட்சியினர் தி.க. பொதுக்கூட்டத்தை கண்டித்தும், போலீசாரை கண்டித்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் தி.க. சார்பில் பெரியார் பிறந்த நாளையொட்டி நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.க. நகர தலைவர் குணசேகரன், தி.க. பேச்சாளர் அன்பழகன், நகர செயலாளர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது பா.ஜனதா கட்சியின் நகர தலைவர் வினோத், முன்னாள் மாவட்ட செயலாளர் இளசுமணி மற்றும் அக்கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு வந்தனர்.

அவர்கள் அப்பகுதியில் உள்ள பிறவிமருந்தீஸ்வரர் கோவில் அருகே திரண்டு நின்று, தி.க. பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா கட்சி குறித்தும், இந்து மதம் குறித்தும் அவதூறாக பேசுவதாக கூறியும், கோவில் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி அளித்த போலீசாரை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து அங்கு சென்ற திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் பா.ஜனதா கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தி.க. பொதுக்கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த தெற்கு வீதிக்கு பா.ஜனதா கட்சியினர் திடீரென செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜனதா கட்சியினர் தி.க. பொதுக்கூட்டத்தை கண்டித்தும், போலீசாரை கண்டித்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், பா.ஜனதா கட்சியினருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்தநிலையில் பா.ஜனதா நகர தலைவர் வினோத் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் திராவிடர் கழகத்தை சேர்ந்த 5 பேர் மீது இந்து கடவுள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் அளித்தார். அதன்பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News