செய்திகள்

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதி கணவன்-மனைவி பலி

Published On 2018-02-22 11:44 GMT   |   Update On 2018-02-22 11:43 GMT
மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதிய விபத்தில் கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் காட்டுப்புதூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில்:

பூதப்பாண்டி அருகே உள்ள காட்டுப்புதூர் காற்றாடிவிளை நேசமணி தெருவைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 35). வாழைத்தார் வெட்டும் தொழிலாளி.

இவரது மனைவி ஞானசெலின் (31). இவர்களுக்கு சஜிதா (8) என்ற மகளும், சஜிர் (6) என்ற மகனும் உள்ளனர்.

ஞானசெலினின் சகோதரி வீடு தக்கலை அருகே உள்ள முட்டைக்காட்டில் உள்ளது. நேற்று அவரது வீட்டுக்கு செந்திலும், ஞானசெலினும் மோட்டார்சைக்கிளில் சென்றனர். பின்னர் அவர்கள் இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இரவு 11 மணி அளவில் அவர்கள் பார்வதிபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் மணல் ஏற்றிக்கொண்டு ஒரு டாரஸ் லாரி வந்தது. வேகமாக வந்த அந்த லாரி, செந்திலின் மோட்டார்சைக்கிளை முந்த முயன்றது.

எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் செந்திலும், ஞானசெலினும் தூக்கி வீசப்பட்டு லாரியின் அடியில் சிக்கினர். முன்பக்க டயரும், பின்பக்க டயரும் ஏறிய நிலையில் கணவன்-மனைவி 2 பேரும் லாரியால் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த அக்கம்பக்கத்தினர் அலறி அடித்து அங்கு ஓடி வந்தனர். பொதுமக்களை பார்த்ததும் லாரி டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தார்.

செந்திலையும், ஞானசெலினையும் பொதுமக்கள் மீட்க முயன்றனர். ஆனால் கணவன்-மனைவி 2 பேரும் லாரியின் அடியில் சிக்கி இறந்து கிடந்தனர். இதுபற்றி கோட்டார் போலீசாருக்கு புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ், சப்-இன்ஸ் பெக்டர்கள் மனோகரன், சசீதரன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். பின்னர் பிணமாக கிடந்த செந்தில், ஞானசெலின் ஆகியோரது உடல்களை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் முசிறி ஊரக்கரையைச் சேர்ந்த சரவணன் ( 38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பலியான செந்திலின் சொந்த ஊர் நாகர்கோவில் புதுக்குடியிருப்பாகும். திருமணத்துக்கு பிறகு மனைவியின் ஊரான காட்டுப்புதூர் காற்றாடிவிளைக்கு சென்று குடியிருந்து வந்தார். செந்திலும், ஞானசெலினும் நேற்று முட்டைக்காடு செல்லும்போது தங்களுடைய 2 குழந்தைகளையும் பாட்டியிடம் ஒப்படைத்து விட்டு சென்றனர். இரவில் தாயும், தந்தையும் திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த குழந்தைகளுக்கு அவர்கள் இறந்து விட்டார்கள் என்ற தகவலே வந்தது. தாயையும், தந்தையையும் இழந்து விட்டதால் 2 குழந்தைகளும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். அவர்களை எப்படி தேற்றுவது, எப்படி வளர்ப்பது? என்ற சோகத்தில் உறவினர்கள் உள்ளனர்.


இந்த சம்பவம் காட்டுப்புதூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

Tags:    

Similar News