செய்திகள்

வி‌ஷவாயு தாக்கி இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு உடனே கொடுக்கவேண்டும்: தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-02-19 09:45 GMT   |   Update On 2018-02-19 09:45 GMT
ஸ்ரீபெரும்புதூரில் வி‌ஷவாயு தாக்கி இறந்த 3 பேரது குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சத்தை தமிழக அரசு உடனே வழங்கவேண்டும் என ஐக்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள்.

அப்போது, பாடம் நாராயணன் என்பவர் ஆஜராகி, ‘கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது வி‌ஷவாயு தாக்கி இறக்கும் துப்புரவு தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று நான் தொடர்ந்த வழக்கில், இந்த ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

தற்போது ஸ்ரீபெரும்புதூரில் கடந்த வாரம் துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர் கழிவுநீர் தொட்டியில் வி‌ஷவாயு தாக்கி இறந்துள்ளனர். அவர்களுக்கு இதுவரை தமிழக அரசு இழப்பீடு வழங்கவில்லை’ என்றார்.

அதற்கு நீதிபதிகள், ‘கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களை கொண்டு சுத்தம் செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ஏன் தீவிரமாக அமல்படுத்தவில்லை?’ என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது அரசு தரப்பு வக்கீல், ‘இதுகுறித்து போதிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படவில்லை’ என்றார். அதற்கு நீதிபதிகள், இந்த காரணத்தை ஏற்க முடியாது. பத்திரிகைகளில் இந்த செய்திகள் வருகிறது. எனவே, ஸ்ரீபெரும்புதூரில் வி‌ஷவாயு தாக்கி இறந்த 3 பேரது குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சத்தை தமிழக அரசு உடனே வழங்கவேண்டும். பாதாள சாக்கடை அடைப்பை மனிதர்களை கொண்டு சரி செய்வதை எதிர்த்து பாடம் நாராயணன் தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று உத்தரவிட்டனர். #tamilnews
Tags:    

Similar News