செய்திகள்

அதிக கட்டணம் கேட்டதால் கண்டக்டர் மீது கத்தி வீச்சு: பயணி ஆத்திரம்

Published On 2018-01-21 10:12 GMT   |   Update On 2018-01-21 11:42 GMT
பஸ்சில் அதிக கட்டணம் கேட்டதால் கண்டக்டர் மீது கத்தி வீசிய சம்பவம் போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

போச்சம்பள்ளி:

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த தொட்டம் பட்டி கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல் (வயது27) மாற்றுத்திறனாளி, அவரது சகோதரர் வேலன் (30).

இவர்கள் இருவரும் நேற்று மாலை மத்தூரில் இருந்து போச்சம்பள்ளிக்கு செல்ல விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட பாண்டிச்சேரி-தர்மபுரி அரசு விரைவு பேருந்தில் ஏறி உள்ளனர்.

வண்டி புறப்பட்டதும், பஸ்சில் இருந்த கண்டக்டர் மத்தூரில் இருந்து போச்சம்பள்ளிக்கு பஸ் நிறுத்தம் கிடையாது என கூறியதோடு, தர்மபுரி டிக்கெட் வாங்கிக்கொண்டு போச்சம்பள்ளியில் இறங்கிக் கொள்ளவும் என கூறியுள்ளார்.

இவர்கள் மத்தூரிலிருந்து-தர்மபுரிக்கு செல்ல பழைய பஸ் கட்டணம் 14 ரூபாய் என நினைத்து சம்மதித்தனர். ஆனால் இது விரைவுப்பஸ் என்பதாலும், தற்போது புதிய கட்டணம் மாறியதாலும் ஒரு நபருக்கு பஸ் கட்டணம் ரூ.40 என கூறி இருவருக்கு ரூ.80 டிக்கெட் கொடுத்துள்ளார். டிக்கெட்டை வாங்கி பார்த்த வேலன் அதிர்ச்சியடைதார். 8 கி.மீ. தூரம் செல்ல 80 ரூபாய் கட்டணமா என இருவருக்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வெற்றிவேல் தன்னிடம் இருந்த ரூ.70ஐ கொடுத்துள்ளார். ஆனால் கண்டக்டர் அவர்களை விடாமல் மீதி ரு:.10-யை திரும்பதிரும்ப கேட்டுக் கொண்டே இருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த வேலன் தனது கைபையில் கூலி வேலைக்கு பயன்படுத்தும் கத்தியை எடுத்து கண்டக்டர் மீது வீசியுள்ளார். உடனே கண்டக்டர் சாதூர்யமாக விலக்கிக் கொண்டதால் எந்த காயமின்றியும் தப்பித்தார்.

போச்சம்பள்ளி பஸ் நிலையம் வந்தவுடன் திடீரென பஸ்சில் இருந்து குதித்து அருகிலிருந்த வயக்காட்டில் புகுந்து வேலன் தப்பி ஓடினார். பிறகு அங்கிருந்த பொது மக்களுக்கு வி‌ஷயம் புரியவே உடல் ஊனமுற்ற வெற்றிவேலை பிடித்து போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் பஸ் கண்டக்டர் புகார் ஏதும் அளிக்காததால் வெற்றிவேலை காவல்துறையினர் விடுவித்தனர். அதிக கட்டணம் கேட்ட காரணமாக கண்டக்டர் மீது கத்தி வீசிய சம்பவம் போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews

Tags:    

Similar News