செய்திகள்

வேலூர் ஜெயிலில் இருந்து கொலை கைதி தப்பி ஓட்டம்

Published On 2017-12-14 10:13 GMT   |   Update On 2017-12-14 10:14 GMT
வேலூர் ஜெயிலில் இருந்து கொலை வழக்கில் கைதானவர் தப்பி ஓடிவிட்டார். பாதுகாப்பான வேலூர் ஜெயிலில் இருந்து கைதி தப்பி ஓடிய சம்பவம் சிறை துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர்:

வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஜெயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் தினமும் மாலை 6 மணிக்கு கைதிகள் அறைகளில் அடைக்கப்படுகின்றனர். மறுநாள் காலை 6 மணிக்கு கைதிகள் அறைகளில் இருந்து திறந்து விடப்படுவார்கள். இன்று காலை வழக்கம் போல் 6 மணிக்கு கைதிகள் அறைகளில் இருந்து திறந்து விடப்பட்டனர்.

சிறைக்காவலர்கள் ஜெயில் வளாகத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை சுமார் 6.30 மணிக்கு ஜெயில் தோட்டம் அருகில் உள்ள ஜெயில்காம்பவுண்ட் சுவரில் வேஷ்டி ஒன்று தொங்கியது. இதனைக் கண்டு சிறைக்காவலர்கள் திடுக்கிட்டனர்.

உடனடியாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிறையில் மணி ஓசை எழுப்பட்டது. அனைத்து கைதிகளையும் வரிசையாக நிற்கவைத்து கணக்கெடுப்பு நடத்தினர்.

அப்போது பழைய பெண்கள் சிறை. இயங்கி வந்த வார்டு பகுதியில் அடைக்கப்பட்டிருந்த சகாதேவன் (42) என்பவர் தப்பி சென்றது தெரிய வந்தது.

ஜெயில் மதில் சுவரில் கம்புஒன்றை சாய்த்து வைத்து ஏறியுள்ளார். சுவரில் உள்ள மின் கம்பியில் வேஷ்டியை கட்டி அதன் மூலம் வெளியே இறங்கி தப்பி செள்றுள்ளார். தப்பி சென்ற சகாதேவன் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சின்ன கந்தி லியை சேர்ந்தவர். டெய்லர் வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பட்டம்மாள் (65) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்தது.

கடந்த அக்டோபர் மாதம் 3-ந்தேதி நிலத்திற்கு சென்ற பட்டம்மாளை சகாதேவன் கிணற்றில் தள்ளி கொலை செய்தார்.

கந்திலி போலீசார் சகாதேவனை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் அவர் ஜெயிலில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

ஜெயில் மதில் சுவர் 15 அடி உயரத்தில் உள்ளது. இதன் மேல் மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஜெயிலுக்கு வெளியே சுற்றி சிறைக் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை மீறி கைதி தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பான வேலூர் ஜெயிலில் இருந்து கைதி தப்பி ஓடிய சம்பவம் சிறை துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயில் சூப்பிரெண்டு சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் கைதி தப்பிய இடத்தை பார்வையிட்டனர்.

இது குறித்து பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சகாதேவனை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News