செய்திகள்

மாதவரம்-சிறுசேரி மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பணிகள் மார்ச் மாதம் தொடங்குகிறது

Published On 2017-12-13 06:53 GMT   |   Update On 2017-12-13 06:54 GMT
2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரி, கோயம்பேடு பஸ்நிலையம்- கலங்கரை விளக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் என 3 வழித்தடங்களில் 107 கி.மீட்டர் பணிகள் வருகிற மார்ச் மாதம் தொடங்கப்பட உள்ளது.

சென்னை:

சென்னை போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக் காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது. கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரையில் உயர் மட்ட பாதையிலும், திருமங்கலம்- நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் போக்கு வரத்து நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக 2 வழித் தடங்களில் 45 கி.மீட்டர் தூரத்துக்கு பணிகள் நடை பெற்று வருகின்றன. இதில் 27 கி.மீட்டர் தூர பணிகள் முடிந்து மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

மீதம் உள்ள இடங்களில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. வருகிற 2018 இறுதிக்குள் 45 கி.மீட்டர் துரத்துக்கு மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.

2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரி, கோயம்பேடு பஸ்நிலையம்- கலங்கரை விளக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் என 3 வழித்தடங்களில் 107 கி.மீட்டர் பணிகள் வருகிற மார்ச் மாதம் தொடங்கப்பட உள்ளது. ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இப்பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான திட்ட அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மாதவரம்- சிறுசேரி 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளில் 104 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

பழைய மகாபலிபுரம் சாலையில் ஐ.டி.நிறுவனங்களை இணைக்கும் வகையில் இந்த மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடை பெறும். தினமும் பல ஆயிரக்கணக்கான கார், வேன், பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள் இந்த சாலையில் கடந்து செல்வதால் அப்பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதனை கட்டுப்படுத்துவதற்காகவும், ஐ.டி. கம்பெனி ஊழியர்களை கவரும் வகையிலும் அந்த மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்கப்படும்.

22 உயர்நிலை ரெயில் நிலையங்களும், 82 சுரங்க ரெயில் நிலையங்களும் கட்டப்படுகிறது. வருகிற மார்ச் மாதம் பணிகள் தொடங்கப்படுகிறது. 10 ஆண்டுகளில் இத்திட்டப் பணிகள் நிறைவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News