செய்திகள்

மாநகர பேருந்தில் சேலை சிக்கியதால் இழுத்து செல்லப்பட்ட பெண் படுகாயம்

Published On 2017-11-22 08:47 GMT   |   Update On 2017-11-22 08:47 GMT
மாநகர பேருந்தின் பக்கவாட்டு இரும்பு தகட்டில் சேலை சிக்கியதால் 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட பெண் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராயபுரம்:

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி உஷா (வயது 38). புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று மாலை அவர் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அருகில் உள்ள பஸ் நிலையத்திற்கு நடந்து வந்தார்.

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ பணி நடப்பதால் சாலை ஓரங்களில் இரும்பு தகடால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி குறுகலாக காணப்படுகிறது.

உஷா நடந்து வந்த போது திருவொற்றியூரில் இருந்து கோயம்பேட்டை நோக்கி மாநகர பஸ் (எண்.159ஏ) குறுகலான பாதை வழியாக வந்தது. பஸ்சின் பக்கவாட்டின் தகடு பெயர்ந்து காணப்பட்டது.

இதில் உஷாவின் சேலை சிக்கிக் கொண்டது. பஸ்சின் வேகத்தில் அவர் தவறி கீழே விழுந்தார். சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு அவரை பஸ் இழுத்துச் சென்றது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து பஸ்சை டிரைவர் நிறுத்தினார். கீழே விழுந்ததில் உஷாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது.

அவரது பல்லும் உடைந்து போனது. அவரை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News